தமிழ்நாடு புலவர் பேரவை சார்பில் 01-03-2025 அன்று இணையவழியில் நடைபெற்ற பாட்டரங்கத்தில் முன்னிலை வகித்து நான் படைத்த கவிதை !
----------------------------------------------------------------------
தமிழா !
உன் நாவினிலே தவழுமொழி தமிழா !
அட , தமிழா !
அமிழ்தான செந்தமிழை
எங்குதான் தொலைத்தாயோ ?
ஆங்கிலமாம் உமிகலந்து
அரைக்கிறதே உன்வாய்தான் !
உமிஎன்றும் உமிதான்,
அதுஉன்மொழிக்கு ஈடாமோ ?
உன்தமிழைச் சிதைக்கின்றாய் !
உனக்கெதற்கு வெள்ளாடை ?
தனித்தமிழில் பேசுதற்குத் தகவிழந்தாய் தமிழ்மகனே !
------தரம்குறைந்தாய், பிறமொழியைத் தழுவுகின்றாய், நின்னுரையில் !
நுனிநாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து இருத்திவிட்டாய் !
------நுந்தமிழை வீழ்த்திவிட்டு நொண்டுகிறாய் தமிழ்பேச !
சுரணைகெட்டு அலைகின்ற சோம்பேறித் தமிழ்மகனே
!
------சொந்தமொழி வீழந்துவிட்டால் சோறுனக்கு யாரிடுவார் ?
திரணைதனைத் தின்றுவிட்டுத் தெருத்தெருவாய்
அலைவாயோ ?
------தீந்தமிழா ! சிந்திக்கும் திறமதையும் இழந்தனையே ?
ஆறறிவு உருவிருந்தும் பகுத்தறிவு உனக்கிலையே
?
------அருந்தமிழைத் தள்ளிவிட்டு ஆங்கிலத்தைப் போற்றுவதா ?
சாறுதனை ஒதுக்கிவிட்டுச் சக்கைதனை உண்ணுவதோ ?
------சல்லியெனத் தாழ்ந்துவிட்ட சாரமிலாத் தமிழ்மகனே !
பள்ளிகளில் கல்லூரிப் படிப்புகளில் ஆங்கிலம்தான்
------பயிற்றுமொழி அலுவலகப்
பயன்பாட்டில் வெள்ளைமொழி
கள்ளிச் செடிகளுக்குக் காலமெலாம் நீர் வார்க்கும்
------காளவாய்த் கமிழ்மகனே கண்ணிரண்டும் குருடாமோ ?
ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அருந்தமிழைக் கையிலெடு !
------அறிவிழந்து மொழிக்கலப்பில் அமிழ்ந்துவிளை யாடாதே !
தேங்கனியாம் தமிழுக்குத் தீங்குவிளை மொழிக்கலப்பை
------திண்ணமுடன் விட்டுவிடு ! தென்னவனே மாறிவிடு !
அறிவார்ந்த தமிழ்மகனாய் அடலேறே மாறிவிடு !
------அரசியல் சகதிகளில் அரத்தமதைச் சொரியாதே !
செறிவான சிந்தனையைக் கையிலெடு, கிளர்ந்துஎழு !
------செம்மாந்த தமிழ்மொழியைப் போற்றிடுக
! காத்திடுக !
வீட்டிற்குள் ஆங்கிலத்தின் விளைச்சலதை அழித்துவிடு !
------வெறியூட்டும் திரையுலக வீணர்களை வீழத்திவிடு !
நாட்டிலினிக் கலப்புமொழி நாகரீகம் ஒழியட்டும் !!
--------நம்மொழியைக் காத்திடுவோம் ! நல்லவர்
காள் ! அணி திரள்க !
வை . வேதரெத்தினம்
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ
(02-03-2025)
-------------------------------------------------------------------------------------------