என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 27 ஏப்ரல், 2022

பாடல் (16) (1968) கழனியில் விளையும் கதிர்நெல் மணிகள் !

-------------------------------------------------------------------------------------

        பாபநாசத்தில் பணி புரிகையில் எழுதிய    

    பொங்கல் வாழ்த்து !

    (1968-ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

-------------------------------------------------------------------------------------

 

             கழனியில்  விளையும்  கதிர்நெல்  மணிகள் !

                 காவினில்  விளையும்  கமுகும்  தெங்கும் !

             செழுமணல்  விளையும்  செயிர்தீர்  கரும்பு !

                 செம்மண் விளையும்  பைங்கனி  வாழை !

             புழுதியில்  விளையும்  பொன்மணி  மஞ்சள் !

                 பொடிமணல்  விளையும்  பூவா   இஞ்சி !

             கழிநிலம்   விளையும்   கவின்சா   மந்தி !

                 கலந்துற  வருவாள்  கனித்தமிழ்த் தையல் !

             விழுமிய  பொங்கல்  விளைத்திட  வருவாள் !

                 வேதனை  தீர்த்து  வாழ்ந்திட அருள்வாள் !

             உழைத்திடும்  மக்கள்  உவப்புடன்  மகிழ்வார் !

                 உள்ளம்  நிறைவுற  நலம்பெற  வாழ்வோம் !

 

-------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam@gmail.com]

 ஆட்சியர்,

 "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 14)

{27-04-2022}

 -------------------------------------------------------------------------------------

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

பாடல் (15) (1968) தீந்தமிழ்ச் சுவைநாடி திரிகின்ற !

------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை

அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்

 திரு.கதிரேசன், என் நெஞ்சக் குடிலில் இடம் கேட்டார் !  

நானோ

சங்கத் தமிழின் நிலை சொன்னேன் !

(1968 – ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

------------------------------------------------------------------------------------


தீந்தமிழ்ச்    சுவைநாடித்     திரிகின்ற   தம்பி !

.......தேனூறும்    தொழிற்கல்வி    மலரூதும்   தும்பி !

வெந்தழலாம்  இந்தியதன்  வேதனையால்  கும்பி,

.......வெந்தழிய   அன்னையுனை   நாடுகிறாள்   நம்பி !

சட்டமெனும்  காவலுடன்  சிறைக்கதவின்  கம்பி !

.......செந்தமிழின் உரிமைதனைச்  சாய்ப்பதுவோ  இந்தி !

கொட்டமதை  அடக்கிடுவோம்  குமுறியெழு ! நெம்பி,

.......கொடுவிலங்கு அறுத்திடுவோம்  குறுங்களிறே வாராய் !!

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 13]

{26-06-2022}

------------------------------------------------------------------------------------

 

திங்கள், 25 ஏப்ரல், 2022

பாடல் (14) (1968) முகவை தந்த முத்து !

-------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்பு பயிற்சித் துறை

இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில்

உதவியாளராகப்

பணியாற்றிய திரு. கணபதி அவர்கள்

புதுக்கோட்டை வந்திருந்த போது அவருக்கு

எழுதி அளித்த கவிதை !

(1968 - ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

-------------------------------------------------------------------------------------

                           

முகவை தந்த முத்து - எங்கள்

.....முத்தமிழின் சொத்து !

..........முற்றியுடல் வற்றியுயிர்

...............பற்றியநல் வித்து !

 

அகவை யஞ்சு ஆறு உள்ளம்

.....அருங்கனியின் சாறு !

..........அன்புமனம்  கொண்டுசினம்

...............நன்றகழும்  ஏறு !


கடமை யொழுகுங் காளை பைங்

.....கமுகுதமிழ்ப்   பாளை !

..........கள்ளமிலா வெள்ளைமனம்

...............துள்ளியெழும்  வாளை !

    

மடமை சாடும் மன்னன் ! பெயர்

.....மயில்முருகன் அண்ணன் !

..........மனமகிழ்ந்து  தினமுயர்ந்து

...............இனிதுவாழ்க கன்னன் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 12]

{25-04-2022}

-------------------------------------------------------------------------------------

 

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

பாடல் (13) (1968) அன்பைச் சொரிந்து வரும் அருவி (திரு.இரமணிக்காக)

------------------------------------------------------------------------------------

                       வேலை வாய்ப்புப் பயிற்சித் துறை

இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு. இரமணி அவர்கள் புதுக்கோட்டை வந்திருந்தபோது எழுதி அளித்த கவிதை. (ஆண்டு 1968)

-------------------------------------------------------------------------------------

 

                 அன்பைச்  சொரிந்து  வரும்  அருவி ! எளிமை

                 ....அழகு  ததும்புகின்ற  ஊற்று ! ஒளிரும்

                 பொன்னில் உறவுகொண்ட  மேனி ! விழியில்

                 ....பொங்கி  வழிந்துவரும்  நிலவு ! எமது

                 நெஞ்சில்  குடிபுகுந்த  தென்றல் ! அழியா

               ....நினைவில்  வளர்ந்துவரும்  கவிதை ! அமுதத்

                 தஞ்சை    உலகளித்த  தரளம் ! மின்னும்

                 ....தங்க    மதுர    மணிக்    கலசம் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 09]

{22-04-2022}

--------------------------------------------------------------------------------------

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

பாடல் (12) (1967) அத்தியனார் வளர்த்தமொழி !

 

-----------------------------------------------------------------------------------------

      தமிழகத் தலைவர்களும் அவர்தம் சிறப்பும் !

         ! – கதம்ப மாலை – !

    ( 1967-ஆம் ஆண்டு எழுதிய பாடல்!)

------------------------------------------------------------------------------------------

 

அகத்தியனார்  வளர்த்தமொழி  அன்னைமொழி  தமிழாம் ! அதில்

      அடங்கியுள்ள  எழுத்துகளில்  முதலெழுத்து   வாம் !

மகத்தான     சாதனைகள்     நிகழ்த்திவரும்   மேதை,

       மாண்புமிகு    முதலமைச்சர்  பெயர்முதலும்  வாம் !

 

பிறந்தவுடன்   குழவியது    வாய்திறந்து  அழுமாம் ! -  அந்த

      பிள்ளைதனின்  அழுகைதனில்  ஒலித்திடுதல்  வாம் !

சிறந்தபெரும்  தவப்புதல்வர்  இராசாசி     என்பார்,

       செல்லமொழி  ஆச்சாரி””       பெயர்முதலும்  வாம் !

 

உலகினையே   உருவாக்கி   உலவவிட்டான்  ஒருவன் ! அவன்

       உற்றபெயர்   இறைவன்அதில் ஒலித்திடுதல்  யாம் !

அலகினையும்  கூர்த்தமதி   அருள்மிகுந்த     தீரர்,

       இஸ்மாயில்  எனும்பெரியார்    பெயர்முதலும்  யாம் !

 

வைகறையின்  இருளகலப்     பவனிவரும்   பரிதி ! தினம்

      வையகத்தைச்  சாடிவரும்    வறுமையெனும்  பேயும்,

கைகட்டி       அடங்கிவரும்,   கதிரவனாம்   அண்ணா !

      கருணைமிக்க  ஆட்சியினால்  தமிழகமும்      வாழும் !

 

கப்பலுக்குத்  திசைகாட்டும்    கருவியது     விண்மீன் ! நெஞ்சில்

      டமுள்ள   மனிதர்களின்   கயமையினைப்   போக்க,

ஒப்பரிய     உத்தமராம்      உலகத்தின்     விண்மீன் !

       ஓங்குபுகழ்    இராசாசி       உள்ளவரை       சாலும் !

 

இரவுதனில்  பிறைமதியும்  குளிர்நிலவைப்  பொழியும் வாழ்வில்

      இன்னலுறும்    மாந்தரது     இடர்ப்பாடு     நீங்கும் !

புரவலராம்  இஸ்மாயில்   பிறைமதியாம் !  அன்னார்,

      புவிமிசையில்   வாழும்வரை  பயநினைவும்  வேண்டா !

 

உயிருக்கு  ஒளியூட்டி     உய்விக்கும்   கோள்கள் ! விண்ணில்

      ஒளிப்பிழம்பு   பானுமதி    விண்மீன்கள்     மூன்று !

பயிருக்கு   வேலியிட்டுப்  பாதுகாக்கும்  தலைவர்  - நமக்கு

      பானுமதி     விண்மீனாய்  விளங்குகின்றார்  உண்மை !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 06]

{19-04-2022}

---------------------------------------------------------------------------------------

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

பாடல் (11) (1967) பைங்கிளியும் தேன்குயிலும் !

=================================================

      பொங்கற் புதுநாளில் பொங்கி வந்த பூங்கவிதை 

                              (1967-ஆம் ஆண்டு எழுதிய 

                          பொங்கல் வாழ்த்துப் பாடல் )

=================================================

      பைங்கிளியும் தேன்குயிலும்

             பழகிவரும் சோலை !

                   நைந்துருகிப் பழச்சாறு

                        மணங்கமழும் சாலை !

 

       கள்வடியும்  முளரிமலர்

            கண்மலரும்   காலை ! 

                   புள்ளினங்கள் துயிலெழுந்துக்

                        குரல்கொடுக்கும்  வேளை !

 

       செங்கரும்பும்  செந்நெல்லும்

            சீர்மனையில்  சூழும் !

                   செவ்வந்திப்  பூங்கதலி             

                           மஞ்சள்வளம் கூறும் !

 

       இல்லமதில்  எழில்பெருகும் !

            இளங்கிளையர்   கோலம் !

                   இருவிரலின் திறம்பகரும் !

                         இருள்விலகும் நேரம் !

               

       மண்பானை அடுப்பிலிட்டு

            மகிழ்ச்சியுடன்   அன்னை !

                   மணிக்கரத்தால் கிளறிவிடப்

                         பொங்கிவரும் பொங்கல் ! ,

 

       பொங்கலோ ! பொங்கலென

            எங்குமொலி  பொங்கும் !!

                   பூந்தமிழர் நெஞ்மெலாம்

                        இன்பமதில் துள்ளும் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி”வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 29]

{12--4-2022}

--------------------------------------------------------------------------------------

 

திங்கள், 11 ஏப்ரல், 2022

பாடல் (10) (1967) முந்தைய பதிவேட்டின் முடிவிருப்பு !

==================================================

அரசினர்  தொழிற்பயிற்சி  நிலையம்,

புதுக்கோட்டையில்

பண்டகக் காப்பாளராகப்  பணியாற்றுகையில்,

இருப்புப் பதிவேடுகளில்

எழுதிய

கவிதை வடிவப் பக்கச் சான்று !

(1967-ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

==================================================

 

முந்தைய  பதிவேட்டின்  முடிவிருப்பு  அத்துணையும்

முறைப்படி  இவ்வேட்டில்  முற்றாகப் பெயர்த்தெழுதி

செந்தமிழில்  தலைப்பிட்டுச்  சிறுபிழையும்  பயிலாது,

செய்தபொருட்  கணக்கெனவே  செப்புகிறோம்  சான்றுரையே !

 

==================================================

 

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 28]

{11-04-2022}

--------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

பாடல் (09) (1966) பஞ்சத்தில் வாடிடும் ஊழியர்க்கு !

=================================================

உணர்ச்சி நிறைந்த ஓவியம் !  ஊழியர்களின் காவியம்

  (1966- ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

=================================================

 

 

பஞ்சத்தில்     வாடிடும்    ஊழியர்க்குப்      படி

    பத்துப்        பதினோரு    ஏழுகளாம் !   -  மலர்

மஞ்சத்தில்    ஆடிடும்     மந்திரிக்கு        முழு

    மாதத்தில்    ஓரிரு        ஆயிரமாம் !   -  அவர்

நெஞ்சத்தில்   ஊறிடும்     எண்ணத்திலே    தினம்

    நல்லதையே    எண்ணி    நாடுவராம் !   -  இன்னும்

கொஞ்சத்தில்  மக்களைக்   கூண்டுடன்  கயிலையைக்

    கண்டிட      நல்வழி      கூறுவராம் !

 

 

தங்கத்தில்    கூடிய        தஞ்சைதனில்    குடல்

    தாளமிடும்      ஒலி          கேட்குதையா !  -  தமிழ்ச்

சங்கத்தில்     பாடிய       மாமதுரை        பிணம்

    சாய்ந்திடும்     கொடுமை     காணுதையா !   -  கடல்

வங்கத்தில்     தோன்றிடும் ஊழிப்புயல்      மனை

    மாடுகளைக்     காவு         கொள்ளுதையா ! -  உயிர்ச்

சிங்கத்தில்     பயணம்      செயவல்ல      தீரர்கள்

    செத்து          மடிகின்ற      நாடிதையா !

 

பானைதனில்    படி        நெல்லுமில்லை !   பசி

    பஞ்சமிலா     உயிர்         யாதுமில்லை !   -   தினம்

சேனைதனில்   கெல்லி    மாவெடுத்துக்       களி

    செய்திட        உப்பிற்கும்   காசுமில்லை !   -   இவர்

யானைதனில்   புடை       சூழவரப்            புகழ்

    பாடிவரத்      தடை       ஏதுமில்லை !   -    கொலைத்

 தானைதனில்   தனி       வாகையுடன்        பெரும்

    பீடுநடை      இடக்         கூசவில்லை !

 

 

 மாட்சிதனில்    மிக்க      மன்னர்கள்      தோன்றிய

     மாரிவளம்      கொண்ட     நாடுஇது !      -  இன்று

 காட்சிதனில்    சில       தூரிகையின்     முனை

      காட்டிட        நோக்கிடும்   பேறுஅது !      -  மனச்

 சாட்சிதனில்    சதிர்       ஆடிடும்         காங்கிரஸ்

      மீட்டிடும்       வீணையின்   ஊளையெது ?   -  அவர் 

 ஆட்சிதனில்    உளம்      நொந்திடும்      பாமரர் 

      கூவிடும்       வீட்சியின்     ஓசையது !

 

 

 ஆறுதனில்    பொடிக்     கூழையுடன்    கடல்

     ஆடிடும்       வெண்மணல்   வேகமுடன்    -  விலை

 ஏறுதெனில்    எலி        உண்டுயிர்      வாழ்ந்திடக்

     கூறிடும்       கீழ்நிலை       ஆட்சியிலே !  -  ஒரு

 கூறுதனில்     விலை     மாறுதலைச்     சிரம்

     கொய்து       மரித்திடா       ஆட்சிதனை   -  தேர்தல்

 சேறுதனில்     வெகு      ஆழமதில்       துயில்

     செய்திட       வைப்பதும்      நம்பணியே !

 

-----------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 27]

{10-04-2022}

----------------------------------------------------------------------------------