என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 19 டிசம்பர், 2022

பாடல் (65) பூந்தமிழ் அறிஞர் கவிஞர்கள் எல்லாம் !

      

புதுவையில் பிறந்து வளர்ந்து, பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பொன்விழா மலர் வெளியீடு தொடர்பாக நான் (வை.வேதரெத்தினம்) எழுதி மின்னஞ்சல் வாயிலாக 19-07-2015 அன்று அனுப்பிய  வாழ்த்துப் பா !

 

*********************************************************************

 

பூந்தமிழ் அறிஞர் கவிஞர்கள் எல்லாம்

          புதுவையில் மலர்வதும் புதுவிதியோ ! 

                  பொன்மனச் செம்மல் பாரதி தாசன்

                          பூத்தது புதுவையின் தலைவிதியோ !

 

சேந்திய தமிழை ஏந்திய கவிஞரை

           செய்தவர் கிருட்டிண சாமியையா !

                  சிசுவாம் பாரதி தாசனின் தாயார்

                          சந்திர அம்மை வாழியலோ !

 

ஈந்திறக் கவிஞர் ஐம்பது ஆண்டில்

          எத்துணை உயரம் வளர்ந்திட்டார்

                  எங்கள் தமிழின் அழகை, புகழை,

                         எங்கணும் எடுத்து ஓதிட்டார் !

 

ஏந்திரப் பாடகம் பிரான்சு நாட்டில்,

         எத்தனை இலக்கியம் படைத்திட்டார்.

                ஏக்கம் நூறு” “காதல் ஆயிரம்

                         இளங்கனி விருத்தம்தொகுத்திட்டார் !

 

கண்ணன் அந்தாதி” “காதல் நாற்பது

         கம்பன்  சிறப்பு  அந்தாதி

                கவிதைத் தலைவன் கண்ணன் தாசன்

                          கமழுது நூல்மணம் கபிலன்நீ !

 

ஒண்மதி மின்வலைப் பூக்கள் ஆயிரம்

         ஒழுகிசை தமிழ்த்தாய் அந்தாதி

                உயர்தமிழ் இலக்கணம்” ”முகநூல் பூக்கள்

                       உரைசொல் ஓவியம்மதிமீதி !

 

விண்மதி தண்மதிவெண்ணிலவே புகழ்

          வெண்ணில வேதிறம் பாடினையே !

                   விருத்தம், வெண்பா எனக்கவி மாலைகள்

                           விரைந்தே பதின்மம் சூடினையே !

 

கண்வளர்நற்றமிழ்ப் பாவலர்ஏந்தல்

         கவிதைச் செல்வர்பட்டங்கள்

                 ”கவிஞர்  மொழிப்போர் மறவர்என்பன

                           கார்முகில் ஈட்டிய சிட்டங்கள் !

 

சொற்பொழி  கவிதை  இலக்கணம்  இலக்கியம்

           சொன்மலை விரும்பும் புலமல்லோ !

                   சோழன் வழிமகன்  சுந்தரத் தமிழில்

                            சுளைகள் அளிப்பது அழகல்லோ !

 

பொற்புறு ஆய்நிலம்அயிரோப்  பாமிசை

          புகல்தமிழ் விதைத்துப் போற்றுகிறார் !

                    போகும் ஊர்தனில் கம்பனின் பெயரும்

                             பொலிவுறத் தமிழ்ப்பணி ஆற்றுகிறார் !

 

விற்கணை கொண்டு வேற்றகம் சென்றார் :

          வென்றார் !  சோழக  நாயகரே !

                   வெண்டமிழ் கொண்டு மண்டக மெங்கும்

                              வென்றார் ! குன்றார் பாவலரே !

 

நற்றமிழ் மணியே ! நவநிதிக்  குவையே !

          நறையே ! இறையே ! பாவேந்தே !

                   நலமுடன்  வாழ்க !  நனிபுகழ் பெறுக !

                             நாவுக்  கரசே வாழியவே !

 

 ********************************************************************

சொல் விளக்கம்; (01) அலோ = அசைச் சொல் ; (02) ஈந்திறம் = தமிழ் ஈகைத் திறன் ; (0) ஏந்திரப் பாடகம் = எந்திரங்கள் இயக்க ஒலி (தொழில் வளம் மிக்க நாடு) ; (04) பத்தினை= பத்து தொகுதிகள் ; (05)சிட்டங்கள் = சிறப்புகள் ; (06) சொன்மலை = சொல்லின் செல்வர் (07) பதின்மம் = பத்து (08) ஆய்நிலம் = அழகிய நிலம்.

********************************************

--------------------------------------------------------------------------------

                                     ஆக்கம் + இடுகை:
               

                                   வை.வேதரெத்தினம்,

                            (vedarethinam70@gmail.com)

                                              ஆட்சியர்,
                   
                            "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

      [திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]

                                             {27-07-2022}

--------------------------------------------------------------------------------