-----------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை அ.தொ.ப,நி. கடைசற் பிரிவுப்
பயிற்றுநர் சிவசிதம்பரம் -
கோமதி திருமணம்
15—9—1969
அன்று நிகழுற்றதை
முன்னிட்டு அவருக்கு
வாசித்தளித்த வாழ்த்து மடல் !
(ஆண்டு 1969)
-----------------------------------------------------------------------------------------
நாட்டின்
நலம்பெருக்க நாட்டமுள்ள நற்றவனே !
…..நல்லறிஞர்
யாத்ததமிழ் போற்றுசிவ சிதம்பரனே !
ஏட்டில்
தடம்பதித்த எம்மதுரைக் குயில்மொழியே !
…..ஈடில்லா
கலைத்திறனை இருகையால் வழங்கபுதுக்
கோட்டைச் சுவர்ப்புறத்துக் கோகர்ண
ஊர்க்கடையில்
…..கோதிலா பல்கலைகள் பயிற்றுவிக்கும் கூடமதில்
கூட்டுக்
குயிலாகக் கூவிவரும் கோமகனே !
…..கோமதியின்
துணைஏற்கும் மாமதுரைக் காவலனே !
*******************************************************************
வெண்ணிலவு தண்மதியை
………விரும்பிமணம் கொண்டதுபோல்,
………………வேய்ங்குழலும் இன்னிசையைத்
………………………தன்னுயிராய்க் காண்பதுபோல்,
கண்ணிமையை
மணிவிழிகள்
………காதலியாய்ப் பேணுதல்போல்
………………காரிகையாள்
கோமதியைக்
………………………கரம்பிடிக்கும் நீர்வாழ்க !
மண்ணுலகில்
இல்லறத்தின்
………மாண்புதனைப் போற்றிடுக !
………………மனத்திருளை நீக்கதிருக்
………………………குறளொளியைப் பெற்றிடுக !
விண்ணுலகில் கண்துயிலும்
………மின்மினியின் பேருலகில்
………………விளையாடும்
வெண்மதியும்
………………………முகிலும்போல் வாழ்ந்திடுக !
*******************************************************************
பெண்மைக்கு
உயிரூட்டிப் பீடுபெற்ற கண்ணகியின்
…..பிறந்தகமாம் சோணாட்டின் எழுகதிரே ! கோமதியே
!
உண்மைக்கு இலக்கணமாய் உறவிற்கோர் பெட்டகமாய்
…..உயிர்வாழ்ந்த கலையரசி மாதவியின்
எழிற்றங்காய் !
பண்புநிறை
நம்தமிழர் பண்பாடு போற்றிடுக !
…..பாரதியின்
கனவிற்குப் பொருளாக வாழ்ந்திடுக !
திண்மையுடன் குறள்வழியில்
தலைநிமிர்ந்து சென்றிடுக !
…..துணைவரது
நெஞ்சமதைக் குடிலாக்கி வாழ்ந்திடுக !
இல்லறமாம்
நீர்ச்சுனையில் சிறகடிக்கும் அன்னங்காள் !
…..எதிர்காலம்
தங்களுக்கு நல்வரவு கூறுதுகாண் !
நல்லறங்கள்
பலவாற்றி நாவலராம் அண்ணாபோல்,
…..நல்லதொரு காட்டாக நலமிகுந்து வாழ்ந்திடுக !
மெல்லிருளைக் கைவிலக்கி மேதினிக்கு ஒளியேற்றும்,
…..மின்பரிதி
விஞ்சுபுகழ் மேவுதமிழ் போல்வாழ்க !
நல்விழைவைச் சொல்லாக்கி
நான் தருவல் வாழியவே !
…..நானான்கு
செல்வமுடன் வளம்பெருக வாழியவே !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 07]
{21-05-2022}
-----------------------------------------------------------------------------------------