என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

இயற்கை நம் உயிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை நம் உயிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஜனவரி, 2026

பாடல் (82) இயற்கை நம் உயிர் !

தமிழ்நாடு புலவர் பேரவையின் சார்பில் 03-01-2026 காரிக்கிழமையன்று மாலை நடைபெற்ற இணையவழிப் பாவரங்கில் முன்னிலை வகித்து நான் அரங்கேற்றிய பாடல் !

--------------------------------------------------------------------------------------------------------------------------


மனிதா ! மனிதா ! மனிதா ! மனிதா !

மனமே உனக்கு உளதா ? இலையா ??

 


 மலைகள் என்பவை மழைதரும் ஊற்று ! !

மதிப்புறு அவற்றை அழித்திடு கின்றாய் !

மழைநீர்ப் பொழிவிடம் மலைகளின் மீது

மனிதா உனக்கேன் துச்சிலும் வீடும் ?

மழைதரும் மலையை அழித்தலும் முறையா ?

மழைநீர்  இன்றிநீ  வாழ்ந்திடு வாயா?

 

 

விலங்குகள் வாழும் வனத்தினை அழித்து

வீடுகள் அமைத்தால் எங்கவை போகும் ?

விலங்கிடம் நோக்கி நீ நகர்ந்திட்டால்

விலங்குகள் வாழ எவ்விடம் செல்லும் ?

உன்னிடம் நோக்கி விலங்குகள் வந்தால்

உனக்கிடம் ஏது ? உறைவிடம் எங்கே ?

 

 

நெல்தரும் கழனியை நித்தமும் மாற்றி

நின்பை நிறைந்திட மனைப்படம்  தீற்றி 

மருதச் செழிப்பின்  மாண்பினை அழிக்கும்

மனிதா ! மனிதா ! கெடுமதி  மனிதா

நாளை உனக்குச் சோறில் லாமல்

நாக்குத் தொங்கி இறப்பு வருகையில்

வீட்டு மனைகள் உதவிக்கு வருமா ?

விட்டில் பூச்சி உனக்கறி விலையா ?

 

உப்பும் மழையும் மீனும் தந்திடும்

உவரியில் குப்பை கூளம் குவித்திடும்

தொப்பை மனிதா ! உனக்கறிவிலையா ?

இயற்கை தந்த வளங்களை எல்லாம்

எதற்கு நீதான் அழித்தொழிக் கின்றாய் ?

காற்றில்  புகையைக் கலக்கும் மனிதா !

ஆற்றில் சாய்க்கடை நீர்விடு கின்றாய் ?

 

எண்ணெயில் நெய்யில் கலப்படம் செய்து

இயற்கை உணவை ஏனழிக் கின்றாய் ?

மதுவை அருந்தி மயங்கித் திரியும்,

மனிதா உனது மண்டையில் களியா ?

இயற்கையை அழித்து  வாழ்ந்திட  நினைத்தால்

இயற்கை உனையே அழித்திடும் அறிவாய் !

இயற்கையை உயிராய் நினைத்துப் போற்று !

இலையேல் உனக்கினி வாழ்க்கையும் இல்லை !

 ---------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம், 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ,

(திருவள்ளுவராண்டு : 2057, சுறவம் (தை) 01)

{15-01-2027}

-----------------------------------------------------------------------------------------------------------