-----------------------------------------------------------------------------------------
வார இதழ் ஒன்றில் வெளியான
சிறுகதையை மையமாகவைத்து
எழுதப்பட்ட கவிதை !
[ஆண்டு.1970]
-----------------------------------------------------------------------------------------
மணங்கமழும் பூக்காட்டில்
மயங்கும் வண்ண,
..........மயிலென்று எண்ணியுளம்
மகிழச் செய்தேன் !
அணங்கவளே மங்கையருள்
அமுதம் என்று
..........ஆசையுடன்
நெஞ்சமதில் அமரச் செய்தேன் !
குணத்தினிலே கன்னியவள்
குரிசில் என்று
..........குடியிருக்க எனதுள்ளக்
குடிலைத் தந்தேன் !
கணப்பொழுதில் எண்ணமெலாம்
கலையச் செய்து
..........காரிகையாள் உள்ளமதைக்
கனலால் சுட்டாள் !
தென்னையெழில் மஞ்சமதில்
தவழும் கிள்ளைத்
..........திருவுருவாய் எண்ணியுளம்
ததும்பச் செய்தேன் !
கன்னிமகள்
பொங்குதமிழ்க் கவிதை என்று
..........கற்பனையில் சிலையெடுத்துக் களிக்கச் செய்தேன் !
புன்னகையை மருந்தாக்கிப் பிணிசூழ் நெஞ்சின்
..........பிழைதீர்க்கும் பூவையென உளப்பூ தந்தேன்
மின்னலென எண்ணமெலாம்
மேவச் செய்து
..........மேகலையாள் உள்ளமதைக் கனலால் சுட்டாள் !
மாங்கனியின்
தீஞ்சுவையில் மகிழும் கொன்றை
..........மணிக்குயிலாய்
எண்ணியுளம் மலரச் செய்தேன் !
பூங்கொடியாள் குழலியருள்
பொதிகை என்று
..........புளகமுற மனக்கதவைத் திறக்கச் செய்தேன் !
தீங்குறளின் நெறியொழுகும்
தெரிவை என்று
..........திண்மையுடன் நம்பியுளத் தேரில் கொண்டேன் !
கங்குலென எண்ணமெலாம்
கருகச் செய்து
..........கணிகையவள் உள்ளமதைக் கனலால் சுட்டாள் !
துள்ளியெழும் வெள்ளலையில்
துவளும் நாவாய்,
..........தூவியெழில் வான்குருகாய்த் தோன்றக் கண்டேன் !
கள்வழியும் நீள்குறிஞ்சிக் கவின்பூ என்று,
..........களிப்புடனே மனக்காவில்
கமழச் செய்தேன் !
வெள்ளிநிலா
துஞ்சுமெழில் வனிதை நல்லாள்,
..........விழிமலரில் துஞ்சியெழ
வேட்கை கொண்டேன் !
பள்ளிகொண்ட எண்ணமெலாம்
பதராய்ச் செய்து
..........பனிமலராள் உள்ளமதைக்
கனலால் சுட்டாள் !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை,