----------------------------------------------------------------------------------
அன்றும் ! இன்றும் ! - ஓர் ஒப்பீடு !
-----------------------------------------------------------------------------------
அன்றைய
நாளில் கால்நடையாக
.....அயலூர் சென்றோம் நோயில்லை !
..........ஆதவன் எழுமுன் துயிலெழச் செய்தோம்
...............அழகிய உடலில் நோயில்லை !
நன்றென
எண்ணிக் காய்கறி உண்டோம்
.....நலிவும் மெலிவும் வரவில்லை !
............நாள்தொறும் ஆற்றில் குளத்தில் குளித்து
..................நீச்சலடித்தோம் அயர்வில்லை !
இன்றைய
நாளில் ஊர்தியில் அன்றி
.....எங்கும் எதற்கும் செலல் இல்லை !
............இரவில் விழித்துப் பகலில் உறங்கும்
. .................இழிகுணம் இன்னும் விடவில்லை !
கண்டதை உண்டு
வயிறும் வாழ்வும்
.....கனலாய் எரிவது நினைவில்லை !
..........கால்கள் அளைந்திட அறையில் குளியல்,
................நீச்சல் கற்கவும் வழியில்லை !
அன்றைய மாந்தன் நீராகாரம்
.....அருந்தி நலமுடன் வாழ்ந்திட்டான் !
............அமுதாய்ப் பழைய சோறும் தயிரும்
. ..................அளவாய் உண்டு மகிழ்ந்திட்டான் !
இன்னலம்
நல்கும் எருவை இட்டான்;
.....எள்ளும் கொள்ளும் விளைத்திட்டான் !
............எங்கணும் கரும்பும் நெல்லும் விளைந்தது
..................இனிதாய் வாழ்வைக் கழித்திட்டான் !
இன்றைய
மாந்தன் எழுந்ததும் குளம்பியை
......இரைப்பைக்
குள்ளே ஊற்றுகிறான் !
............இட்டளி சத்துணி இரண்டையும் மாந்தி
...................இருக்கும் வலுவையும் இழக்கின்றான் !
நன்மைகள்
தாரா உரத்தை, மருந்தை
......நயந்தே வயலில்
தெளிக்கின்றான் !
. ..........நலிவை ஊட்டும் வேதிப் பொருள்களை
.................நாளும் உண்டு இளைக்கின்றான் !
அன்றைய
மாந்தன் உண்மையைப் பேசி
.....நன்மையைச் செய்து வாழ்ந்திட்டான் !
..........இன்றைய மாந்தன் பொய்களை விற்றுப்
..............பைகளைப் வாங்கித் தாழ்ந்திட்டான் !
அன்றைய
மாந்தன் நேரிய வழியில்
......ஈட்டிய பணத்தை ஈந்திட்டான் !
............இன்றைய மாந்தன் கொள்ளை அடித்துக்
.................குவிப்பதில் மிகவும் தேர்ந்திட்டான் !
அன்றைய
மாந்தன் ஏய்த்துப் பிழைத்தல்
......ஈனத் தொழில் என வாழ்ந்திட்டான் !
............இன்றைய மாந்தன் எதையும் செய்யும்
..................இழிகுணம் தன்னில்
வீழ்ந்திட்டான் !
அன்றைய உலகம்
அமைதியும் வளமும்
......அரும்பிடச் செழித்து இலங்கியது !
...........இன்றைய உலகம் பித்தம் பிடித்தவர்
...............ஆள்கையில் நித்தமும் அழிகிறது !
கண்கள்
இருந்தும் குருடாய் வாழும்
......மாந்தரை நினைத்தால் துயிலில்லை !
...........கவலை மனதில் சடுகுடு ஆடும்
.................காட்சியை நினைத்தால் துயிலில்லை !
பெண்கள்
இங்கே பாலியல் துன்பம்
.....அடைதல் கண்டால் துயிலில்லை !
............பேய்கள் போல ஊர்தியில் பறக்கும்
...................பேதையை நினைத்தால் துயிலில்லை !
மன்பதை
தன்னில் நீதியும் நேர்மையும்
......மடிவதைக் கண்டால் துயிலில்லை !
............மானம் பெரிதென வாழ்ந்த தமிழினம்
....................மயங்குது மதுவில் துயிலில்லை
!
அன்பும் அருளும்
நலியுது நாட்டில்
......அந்தோ தமிழா ! உணர்வாயா ?
............அன்னைத் தமிழைக் கண்போல் காக்கும்
....................அறிவை நீயும் பெறுவாயா ?
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
------------------------------------------------------------------------------------