என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

பாடல் (73) (2020) அன்றைய நாளில் கால்நடையாக அயலூர் !

  

----------------------------------------------------------------------------------

அன்றும் ! இன்றும் ! - ஓர் ஒப்பீடு !

 [2020 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை]

-----------------------------------------------------------------------------------

 

      அன்றைய நாளில் கால்நடையாக

                .....அயலூர் சென்றோம் நோயில்லை !

                ..........ஆதவன் எழுமுன் துயிலெழச் செய்தோம்

                ...............அழகிய உடலில் நோயில்லை !

 

      நன்றென எண்ணிக் காய்கறி உண்டோம்

                .....நலிவும் மெலிவும் வரவில்லை !

                ............நாள்தொறும் ஆற்றில் குளத்தில் குளித்து

                ..................நீச்சலடித்தோம் அயர்வில்லை !

 

      இன்றைய நாளில் ஊர்தியில் அன்றி

                .....எங்கும் எதற்கும் செலல் இல்லை !

                ............இரவில் விழித்துப் பகலில் உறங்கும்

.                .................இழிகுணம் இன்னும் விடவில்லை !

 

      கண்டதை உண்டு வயிறும் வாழ்வும்

                .....கனலாய் எரிவது நினைவில்லை !

                ..........கால்கள் அளைந்திட அறையில் குளியல்,

                ................நீச்சல் கற்கவும் வழியில்லை !

 

      அன்றைய மாந்தன் நீராகாரம்

                .....அருந்தி நலமுடன் வாழ்ந்திட்டான் !

                ............அமுதாய்ப் பழைய சோறும் தயிரும்

.                ..................அளவாய் உண்டு மகிழ்ந்திட்டான் !

 

      இன்னலம் நல்கும்  எருவை இட்டான்;

                .....எள்ளும் கொள்ளும் விளைத்திட்டான் !

                ............எங்கணும் கரும்பும் நெல்லும் விளைந்தது

                ..................இனிதாய் வாழ்வைக் கழித்திட்டான் !

 

      இன்றைய மாந்தன் எழுந்ததும் குளம்பியை

                ......இரைப்பைக் குள்ளே ஊற்றுகிறான் !

                ............இட்டளி சத்துணி இரண்டையும் மாந்தி

                ...................இருக்கும் வலுவையும் இழக்கின்றான் !

 

      நன்மைகள் தாரா உரத்தை, மருந்தை

                ......நயந்தே  வயலில் தெளிக்கின்றான் !

.                ..........நலிவை ஊட்டும் வேதிப் பொருள்களை

                .................நாளும் உண்டு இளைக்கின்றான் !

 

      அன்றைய மாந்தன் உண்மையைப் பேசி

                .....நன்மையைச் செய்து வாழ்ந்திட்டான் !

                ..........இன்றைய மாந்தன் பொய்களை விற்றுப்

                ..............பைகளைப் வாங்கித் தாழ்ந்திட்டான் !

 

      அன்றைய மாந்தன் நேரிய வழியில்

                ......ஈட்டிய பணத்தை  ஈந்திட்டான் !

                ............இன்றைய மாந்தன் கொள்ளை அடித்துக்

                .................குவிப்பதில் மிகவும் தேர்ந்திட்டான் !

 

      அன்றைய மாந்தன் ஏய்த்துப் பிழைத்தல்

                ......ஈனத் தொழில் என வாழ்ந்திட்டான் !

                ............இன்றைய மாந்தன் எதையும் செய்யும்

                ..................இழிகுணம் தன்னில்  வீழ்ந்திட்டான் !

 

      அன்றைய உலகம் அமைதியும் வளமும்

                ......அரும்பிடச் செழித்து இலங்கியது !

                ...........இன்றைய உலகம் பித்தம் பிடித்தவர்

                ...............ஆள்கையில் நித்தமும் அழிகிறது !

 

      கண்கள் இருந்தும் குருடாய் வாழும்

                ......மாந்தரை நினைத்தால் துயிலில்லை !

                ...........கவலை மனதில் சடுகுடு ஆடும்

                .................காட்சியை நினைத்தால் துயிலில்லை !

 

      பெண்கள் இங்கே பாலியல் துன்பம்

                .....அடைதல் கண்டால் துயிலில்லை !

                ............பேய்கள் போல ஊர்தியில் பறக்கும்

                ...................பேதையை நினைத்தால் துயிலில்லை !

 

      மன்பதை தன்னில் நீதியும் நேர்மையும்

                ......மடிவதைக் கண்டால் துயிலில்லை !

                ............மானம் பெரிதென வாழ்ந்த தமிழினம்

                ....................மயங்குது மதுவில்  துயிலில்லை !

 

      அன்பும் அருளும் நலியுது நாட்டில்

                ......அந்தோ தமிழா ! உணர்வாயா ?

                ............அன்னைத் தமிழைக் கண்போல் காக்கும்

                ....................அறிவை நீயும் பெறுவாயா ?

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2055 , மடங்கல் (ஆவணி )18]

 {03- 09 -2024}

------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக