என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 28 ஜூன், 2022

பாடல் (51) (1975) தலைமைப் பொறுப்பேற்ற தகுதிசால் (பயிற்சி நிறைவு)


 

நாகப்பட்டினம் அரசினர்  தொழிற் பயிற்சி நிலையம்

மின்னிணைப்பியல்  பிரிவு  பயிற்சி

நிறைவு  விழாவின் போது நான் ஆற்றிய

உரை !

(ஆண்டு 1975)

-----------------------------------------------------------------------------------------

              

தலைமைப்  பொறுப்பேற்ற தகுதிசால் பெருந்தகையே !

....தளிர்த்துவரும்  செடிகளுக்கு  நீர்வார்க்கும்  பயிற்றுநர்காள் !

கலைமகள்  அருள்பெற்ற  கரம்பொலியும்  நண்பர்களே !

.....கவின்சுவை  உணவளித்த  காஞ்சிவிளை  அரும்புகளே !

              

விலைதந்து  பெறற்கரிய  வெண்ணிலவாம்  பேழைகளே !

.....வெற்றித் திருவாசல் விரைந்தணுகும்  வேங்கைகளே !

உலையிட்ட அரிசியென  உள்மலர்ந்த  வாலைகளே !

.....உரிமையுடன்  அழைத்தோரே !  உளங்கனிந்த நல்வணக்கம் !

 

மின்னிணைப்பு  இயல்பயின்ற  மெய்யறிவுச்  சிட்டுகளே !

.....மிடிமைத்  தளையுடைத்து  மேலெழுந்த  மொட்டுகளே !

மென்கரத்தில்  கலைச்செல்வம்  துயில்கொள்ளும்  ஏந்தல்களே !

.....மைபிடித்த  கரமுடையோன்  மனதார  வாழ்த்துகிறேன் !

              

ஈராண்டுப்  பயிற்சியிலே  இறுதிநிலை  எய்திவிட்டீர் !

.....இனிய எதிர்காலம்  இமைவலிக்க  நோக்குகிறீர் !

ஆராவமு  தடைய   அடையாளம்  தேடுகிறீர் !

.....அருங்கலையின்  துணைகொண்டு  ஆல்போல  வாழியவே !

 

இனியகன வெல்லாம்  இலங்கட்டும்  நனவாக !

.....எடுக்கின்ற  நெய்யடிசில்  எழில்பெறட்டும்  அமுதாக !

கனிந்துவரும்  எதிர்காலம்  கைவரட்டும்  களிப்பாக !

.....கைவினைஞர் நும்வாழ்வு  கரைமலிக  தீம்புனலாய் !

              

உழைப்புதான் நல்வாழ்வின்  உருத்துலக்கும்  கண்ணாடி

.....உந்தல்  உணர்வொன்றே  வளம்பெருக்கும்  தேன்மாரி !

பிழைப்பின் கடைக்கால்தான்  பீடுடைய  நல்லறிவு !

.....பெருஞ்செல்வம்  மண்டியிடும்  பிழையில்லா இலக்குஎனில் !

 

இனிய  சுவையுண்டி  ஈங்களித்த  மாணவர்காள் !

.....இன்றமிழில்  கவிதையிலே  அழைப்புவிட்ட  இளவல்களே!

கனித்தமிழில்  சொல்லெடுத்துக் களங்கமின்றி  வாழ்த்துகிறேன் !

.....கலைஞர்களே  வாழியநீர் ! கடல்மணியீர்  என்நன்றி !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethina70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக