என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 6 ஜூன், 2022

பாடல் (42) ஆறாத அன்புநிறை அவைத்தலைவ (பெ.இராசகோபால்) !

------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அலுவலகத்தில் சிறிது காலம்

பணியாற்றிவிட்டு, பணியிலிருந்து நீக்கம் பெற்று விலகிச்

சென்ற எனது உதவியாளர் பெ.இராசகோபாலனுக்கு அளிக்கப்பெற்ற

தேனீர் விருந்தில் நான் ஆற்றிய உரை !

(ஆண்டு.1971)

-------------------------------------------------------------------------------------


ஆறாத        அன்புநிறை     

……….அவைத்தலைவ ! செயல்றவ !

சீறாத         உணர்வலைகள் 

……….சிந்தையுள       ஊழியர்காள் !

ஏறாத         மலைமுடியீர் !  

……….இயம்புவநான்    நல்வணக்கம் !

 

 

வானுயரப்        பறக்கின்ற       

……….பருந்தைப்        போல

……………வல்லாண்மைப்  புகழ்கொண்ட   

……………..…வல்லோர்        ஊடே ,

 

கானுறையும்     கௌதாரிப்      

……….பறவை            அன்ன

……………கற்றோரின்       நடுவினிலே     

………………..நிற்கின்றேன்     யான் !

 

கோனுயரப்       பாடுகின்ற       

……….புலவர்            போல ,

……………குழுமியுள்ள      ஊழியர்காள்    

………………..பொறுமை     கொள்க !

 

நானுயர          வழிதேடி        

……….வந்தேன்           இல்லை ,

……………நவின்றிடுவேன்  நல்வணக்கம்   

………………..ஏற்றுக்         கொள்க !

 

 

 

சிலதிங்கள்       இம்மனையில்      

……….பணிகள்       ஆற்றி ,

சிந்திவிழும் தேன்துளிபோல்

..........சிதறிச்    செல்லும்

 

 மலரனையோய் தங்களது

……….அறிவின் மாட்சி ! 

மாளாது ! மறையாது !         

……….மடிவும்         ஏது ?

 

 

பணிபுரிந்த       காலமதைக்     

……….கைவிரலில்      எண்ணிடலாம் !

பழகிவந்த        நல்முறையைச் 

……….சிலவரியில்      கூறிடலாம் !

 

அணிமிகுந்த ஒப்புரவைக்

……….கவிதைகளில் பாடிடலாம் !

அழியாத          நினைவூற்றை  

……….அடைத்திடுதல்   இயலாது

 

ஊக்கம்       மிகவுண்டு ;     

……….ஒப்புரவு          அறிகின்றீர் ,

உறுவலியைக்    கைக்கொண்டு 

……….வினைபலவே   ஆற்றவலீர் !

 

ஆக்கம்       பெறுதற்கு       

……….ஆள்வலிமை     உண்டாகின் ,

ஏற்றம்       அடைவதுடன்    

……….இசையுடனே     வாழ்ந்திடலாம் !

 

 

காலத்தின்        கோலமிது       

……….வருந்தல்         வேண்டா !

கற்பூரம்           என்றைக்கும்    

……….மணமே          போகா !

 

ஞாலத்தில்       தங்கட்கும்       

……….ஏற்றம்            உண்டு !

நலமுடனே       வாழ்ந்திடுவீர் !  

……….புகழ்ச்சி           இல்லை !

 

 

அன்னைத்      தமிழ்த்தாயின்   

……….அருளென்றும்    நுமக்குண்டு !

ஆதவனாம்       அண்ணாவின்   

……….ல்லாசி          மிகவுண்டு !

 

மன்றத்துள்     கூடியுள       

……….மனங்களெலாம் வாழ்த்துதுவே !!

மங்காத         ஒளிவிளக்கே !     

……….வாழியநீர் !       வாழியவே !

 

அறிவிற்கும்      செயலுக்கும்      

……….அழிவே           இல்லை !

அடைந்திடுவீர்   வெகுவிரைவில் 

……….உயர்வை          நீரே !

 

முறிந்துவிட்ட    தளிரேநீர்         

……….முயன்றால்       வாழ்வில் ,

மூதறிஞர்         அண்ணாபோல்  

……….வாழ்வீர் !         வாழி !!

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 23]

{06-06-2022}

------------------------------------------------------------------------------------