தமிழ்ச்சிப்பி !

என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 7 மார்ச், 2025

பாடல் (74) தமிழா ! விழி ! எழு !

தமிழ்நாடு புலவர் பேரவையின் இணைய வழிப் பாட்டரங்கில் 01-02-2025 அன்று  முன்னிலை வகித்து நான் அரங்கேற்றிய பாடல் ! 

-------------------------------------------------------------------------------


தமிழா  ! விழி  ! எழு !

உறங்கி உறங்கியே  நீ இழந்தவைகள் ஏராளம் !

உடனடியாக  நீ விழி ! எழு !

 

உண்ணும் உணவில் தாய்த்தமிழ் இல்லை !

------உடுக்கும் உடையில் தாய்த்தமிழ் இல்லை ! 

பண்ணும் தொழிலில் தாய்த்தமிழ் இல்லை !

------படிக்கும் பள்ளியில் தாய்த்தமிழ் இல்லை !

விண்ணில்  மண்ணில்  தாய்த்தமிழ் இல்லை !

------விளையாட்  டிலுமுன்  தாய்த்தமிழ் இல்லை ! 

எண்ணிலடங்காத் துயரில் தாய்த்தமிழ் !

------என்றைக் குத்தான் விழிப்பாய்  தமிழா !

 

அணியணி  யாக வேற்றார் வருகை –

------அத்துணை இடத்திலும் அவரே ஆள்கை !

வணிகம் எல்லாம் சேட்டுகள் கையில்-

-------வாடுது தமிழகம் உனக்கிலை  கவலை ?

பிணியாய் நம்மைப்  பிழியுது  வடக்கு ! –

--------பெருமைகள் எல்லாம் கலையுது கனவாய் !

மணித்தமிழ் மெல்ல அழியுது நாட்டில் -

     --------மடையா நீயினி  விழிப்பது என்றோ ?

 

ஒற்றுமை இல்லாத் தமிழா ! – உன்னால்

--------உடையுது புகழும் மானமும் மொழியும் !

அற்றது நம்மிடம் பண்பும் அன்பும் !

-------அறிவையும் இழந்து உரிமையும் இழந்தால்

வெற்றுரை பேசும் வீணர்கள் என்று,

--------வேற்றார் நம்மை ஏசுவர் தமிழா !

இற்றைப் பொழுதே  விழித்திடு  தமிழா !

--------இனியொரு விடியல் உனக்கிலை  ல்லை ! 

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(02-03-2025)

-------------------------------------------------------------------------------------------