என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 21 மே, 2025

பாடல் (77) நெடிதே உறங்கும் தமிழினமே உன் நித்திரை கலைவது எப்போது ?

 

நெடிதே  உறங்கும் தமிழினமே  - உன்

----------நித்திரை கலைவது எப்போது ?

கடிதே  உறங்கும் தமிழனமே ! – உன்

----------கண் மலர் திறப்பது எப்போது ?

மடிதே  உறங்கும் தமிழினமே – உன்

----------மடிமை கலைவது எப்போது ?

விடியல்  உனக்குத் தெரியலையா ? – உன்

----------விழிகளைத் திறந்து உலகைப் பார் !

 

உலகில் மூத்தது தமிழலவோ ? – உன்

----------மூச்சினில்  மலர்ந்த மொழியலவோ ?

அலகை மாந்தர் கவடுவழி  - நம்

-----------அன்னைத் தமிழை அழிப்பதுவோ ?

சிலையாய்த் தமிழன் சமைந்தது ஏன் ? - உன்

-----------சிந்தையில் உறக்கம் கலையவிலை  !!

மலையில் விளைந்த நறுஞ்சாந்தம் – இன்று

----------மண்ணில் புதைந்து மடிகிறதே !

 

எங்கும்  எதையும் கலப்பதுவோ ? – நம்

----------இனமொழி தமிழைச் சிதைப்பதுவோ ?

ஆங்கிலம் ஒருபுறம் சிதைக்கிறது ! – தீய

----------வடமொழி மறுபுறம் அழிக்கிறது !

தங்கத் தமிழா உறங்குவதேன் ? – உன்

----------தலைமைப் பண்பும் வீழ்ந்தது ஏன் ?

பொங்கு மாங்கடல் எழுவதைப் போல் – நீ

----------புலிபோல்  எழுவதும்  எந்நாளோ ? 

 

தமிழில்  ஆங்கிலம் கலப்பதுவோ  ! – உன்

----------தனித்துவம் மறைந்திட உறங்குவதோ ?

அமிலச்  சொற்கள்  நற்றமிழை – இன்று

----------அழித்திட நாமே இடம்தந்தோம் !

உமியைக் கலந்து அரிசியுடன் – நீ

----------உலையில் இடுவதை  என்னென்பேன் ?

தமிழா ! தமிழா ! விழித்திடுவாய் ! – நீ

----------தயக்கம்  கலைத்து உயிர்த்தெழுவாய் !!

 

இரயிலும் பஸ்ஸும் நம் வாயில் – நித்தம்

----------இடம்பெறத்  தமிழினம் இசைகுவதோ?

உரமில்  டீயும்  பிஸ்கட்டும் – உன்

----------உரிமையைப் பறிப்பது தெரிகிலையோ ?

வரமோ ? அறமோ ? ஈங்கில்லை ! – நீ

----------வாழ்வது தமிழால் மறவாதே !

கரத்தில் தவழும் வாச்சினிலே ! – உன்

----------கனித்தமிழ் சிதைவது தெரிகிலையோ ?

 

வைகறைத் துயிலெழு வேளைமுதல் – உன்

----------வாள்விழி  மூடித்  துயிலும் வரை !

ஐயகோ  ஆங்கிலம் உன்நாவில் – நிதம் 

----------அலறுது ! அலறுது ! அறமிதுவோ ?

மைவிழி மம்மி டாடியெலாம் – தமிழ்

----------மரபினில் விளைந்த  சொல்லிலையே !

பைந்தமிழ் மறந்த தமிழினமே ! – நெஞ்சம்

----------பதறுது ! பதறுது ! புரியலையா ?

 

தமிங்கிலம் நமக்கினி வேண்டாவே ! – நம்

----------தடுமாற்ற மேநமை  வீழத்திவிடும் !

அமிழ்தினும் இனிய தமிழ்மொழியை – நாம்

----------அருமருந் தாகப் புரந்திடுவோம் !

துமித்  துமியாகக் கலப்புமொழி – நமைத் 

----------துப்புர  வாகவே  அழித்துவிடும் !

திமிறும் கலப்பை  ஒழித்திடுவோம் ! – இனித்

----------தீந்தமிழ் காத்து வாழ்ந்திடுவோம் !

 

வேண்டா ! வேண்டா ! தமிங்கிலமே ! – நம்

----------நம் விழிகளைக் குதறிக் கிழித்திடுமே !

தூண்டா விளக்கு அணைவதுபோல் – தமிழ்

----------துஞ்சிடும் ஒருநாள் சிந்திப்பாய் !

ஏண்டா தமிழா ! மொழியுணர்வு, - உன்

----------இதயம்   விட்டே மறைந்ததுவோ ?

ஆண்டநம் தலைமுறை தமிழ் மண்ணில் – இனி

----------ஆளுவ தெந்நாள் ? எந்நாளோ ?

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(21-05-2025)

-------------------------------------------------------------------------------------------

 

பாடல் (76) அடுத்து வரும் தலைமுறையை அழிப்பதற்குத் துணியாதீர் !

உள்ளத்தின் கருத்துகளைப்  பிறருக்கு உணர்த்துகின்ற 

------உயர்ந்ததொரு    கருவிதான்  மொழியென்பர்  உணர்வீரே  ! !

உள்ளூரும் சிந்தனையை உரைப்பதற்கு அன்னைமொழி

------உதவுதல் போல பிறமொழிகள் உதவாது  அறிவீரே   

வள்ளுவத்தை நமக்களித்த நல்லறிஞன்  தமிழன்றி

------வேற்றுமொழி அறிந்தவனா  விளம்பிடுக மும்மொழியீர் !  

கள்ளமனம் உடையோரின்  கனவுதான் மூன்றுமொழி !   

------கருத்துடனே ஆய்ந்திடுக !  கனித் தமிழின் பிள்ளைகளே  !

 

ஒற்றை மொழியறிந்து  உயர்ந்தவர்கள் ஈங்கு இலையா ?

------உயர்வடைய மும்மொழிதான் உனக்கிங்கு அகத்தியமா ?

கற்கின்ற  கல்விதான் உயர்வுதரும், மொழியன்று !

------கரிசனமாய் மும்மொழியைத் திணிப்பவர்கள் யாரையா ?

வெற்றுரையால் நெல்விளையா ! வீடணர்கள் நோக்கமென்ன ?

------விளையாட்டு அரசியலால் வீணாகும் நம்வாழ்வு  !

சற்றேனும் பொறுப்பின்றிச் சாற்றுவதேன்  மும்மொழியை

------சந்துமுனை அரசியலைச் சரிக்கும் நாள்  எந்நாளோ ?

 

ஒற்றைமொழிக்  கல்விதந்து உயர்கிறது பன்னாடு !

------உருப்படா மும்மொழியால் வீழ்கிறது நம்நாடு !

எற்றைக்கு ஈங்குஉளோர் விழிப்படைவர்  தெரியவிலை  !

------எம்மக்கள் என்றைக்கு மீண்டெழுவர் புரியவிலை  !

குற்றம்செய்  உணர்வின்றிக் கோலோச்ச முனைகின்றீர்  !  !

------குறுமதியீர் !  பதவிக்கும் பணத்திற்கும் அலைவது ஏன் ?

அற்றம் சரியன்று ! அறிவிலிகாள் ! திருந்திடுவீர் !

------அடுத்துவரும்  தலைமுறையை அழிப்பதற்குத் துணியாதீர் !

                       -----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(21-05-2025)

-------------------------------------------------------------------------------------------

 

 

      

      

திங்கள், 5 மே, 2025

பாடல் (75) தமிழா ! இது தமிழா ! உன் நாவினிலே தவழுமொழி தமிழா?

 

தமிழா ! இது தமிழா ! – உன் நாவினிலே தவழுமொழி தமிழா ! அட தமிழா !

 

அமிழ்தான செந்தமிழை எங்குதான்  தொலைத்தாயோ ?

----ஆங்கிலமாம்  உமி கலந்து அரைக்கிறதே உன் வாய்தான்  !

உமி என்றும் உமிதான் அது உன் மொழிக்கு ஈடாமோ ?

------உன் தமிழைச்  சிதைக்கின்றாய் ! உனக்கெதற்கு வெள்ளாடை ?  

 

தனித் தமிழில் பேசுதற்குத் தகவி ழந்தாய் தமிழ் மகனே !

------தரம் குறைந்தாய் பிறமொழியைத் தழுவுகின்றாய் நின்னுரையில்

நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டு  வந்து இருத்திவிட்டாய் !

------நுந்தமிழை வீழ்த்திவிட்டு நொண்டுகிறாய் தமிழ் பேச !

 

சுரணை கெட்டு அலைகின்ற  சோம்பேறித் தமிழ்மகனே   !

-------சொந்தமொழி    வீழந்துவிட்டால் சோறுனக்கு யாரிடுவார் ?

திரணைதனைத் தின்று விட்டு தெருத் தெருவாய்  அலைவாயோ   ?

-------தீந்தமிழா  ! சிந்திக்கும் திறமதையும் இழந்தனையே  ?

 

ஆறறிவு உருவிருந்தும்   பகுத்தறிவு உனக்கிலையே ?  

--------அருந்தமிழைத்  தள்ளி விட்டு ஆங்கிலத்தைப் போற்றுவதா ? 

சாறுதனை ஒதுக்கிவிட்டுச் சக்கைதனை உண்ணுவதோ ?

---------சல்லியெனத் தாழ்ந்துவிட்ட  சாரமிலாத்  தமிழ்மகனே  !

 

பள்ளிகளில்  கல்லூரிப் படிப்புகளில் ஆங்கிலம் தான் 

---------பயிற்றுமொழி  அலுவலகப் பயன்பாட்டில் வெள்ளைமொழி 

கள்ளிச் செடிகளுக்குக் காலமெலாம்   நீர் வார்க்கும்

---------காளவாய்த் கமிழ் மகனே கண்ணிரண்டும் குருடாமோ ?

 

ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அருந்தமிழைக் கையிலெடு !

---------அறிவிழந்து மொழிக் கலப்பில் அமிழ்ந்துவிளை  யாடாதே !

தேங்கனியாம் தமிழுக்குத்  தீங்குவிளை  மொழிக்கலப்பை

---------திண்ணமுடன் விட்டுவிடு !  தென்னவனே மாறிவிடு !

 

அறிவார்ந்த தமிழ்மகனாய் அடலேறே மாறிவிடு !

---------அரசியல் சகதிகளில் அரத்தமதைச் சொரியாதே !  

செறிவான  சிந்தனையைக் கையிலெடு, கிளர்ந்து எழு !  !  ! 

----------செம்மாந்த தமிழ்மொழியைப் போற்றிடுக  ! காத்திடுக

 

வீட்டிற்குள் ஆங்கிலத்தின்  விளைச்சலதை அழித்துவிடு !

--------வெறியூட்டும் திரையுலக வீணர்களை வீழத்திவிடு !

நாட்டிலினிக்  கலப்புமொழி  நாகரீகம் ஒழியட்டும்  !!

--------நம்மொழியைக் காத்திடுவோம் !  நல்லவர் காள் ! அணி திரள்க !


  -----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை . வேதரெத்தினம்
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ
(05-05-2025)

---------------------------------------------------------------------------------------------