---------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் மொழி !
இன்றைய உலகில் வழங்கும் மொழிகள்
ஏழா யிரத்து இருநூ றாம் !
இவற்றுள் முதல்மொழி
என்னும் தகுதி
எந்தமிழ்
மொழிக்கே உரித்தாகும்!
தொன்று தொட்டு
உயிர்ப்புடன் வாழ்பவை
தமிழும் சீனமும் எனச்
சொல்வர்
துல்லியமாகச் சொல்வது
அரிது !
தமிழின் அகவைபல்
ஆயிரமாம் !
இலக்கணம் தன்னைத்
தனக்கு வகுத்த
முதல் மொழி எங்கள்
தமிழ்மொழியே
இலக்கிய வளத்தில்
தொன்மை வாய்ந்தது !
எங்கள்
தமிழ்மொழி ! முதல்மொழியே !
நிலமும் நீரும்
தோன்றிய போதே
முகிழ்த்தது எங்கள் தமிழ் மொழியே !
நிலவும் வானும் காற்றும்
மீனும்
நித்தமும் ஆய்ந்தது
தமிழ் மொழியே !
யாதும் ஊரே ! யாவரும்
கேளிர்
என்றுரை மேன்மொழி சொன்ன மொழி
!
யாண்டும் இடும்பை
இலவெனும் நிலையை
எய்திட நெறியுரை
தந்த மொழி !
ஓதும் நாளும்
அறிவியல் ஆய்வில்
மூழ்கிய முதல்மொழி
தமிழ் மொழியே !
உரைத்தது அன்றே வலவன் ஏவா
உயர் வான் ஊர்தியைச்
சொன்ன மொழி !
அன்னையும் தந்தையும்
முன்னறி தெய்வம்
அவ்வையின் கூற்று நம் மொழியே !
அற்றம் காக்கும் கருவி
அறிவென
அறைந்ததில் முதல்
மொழி தமிழ்மொழியே !
அன்பிற் கில்லை
அடைக்கும் தாழென
ஆண்டீ ராயிரம் முன்சொன் னார் !
அதுவே எம்மொழி
முதல்மொழி தமிழ் மொழி
உலகில் தோன்றிய
முதல் மொழியே !
விருந்து புறத்தில்
இருந்திட உண்ணா
வியநெறி சொன்ன
முதல் மொழியே !
வெற்றியின் இலக்கை எய்திட முயற்சி
வேண்டும் எனவழி
சொன்னமொழி !
மருந்தென வேண்டா
அருந்திய உணவு
மறைந்தது அறிந்து
உண்பீரேல்
மருத்துவ அறிஞன்
வள்ளுவன் வாய்மொழி
மாண்புடன் நிறுவிய
முதல்மொழியே !
அறவழி, அறிவியல் நெறிவழி,
உலகில்
அறிவினை அடைவழி உரைத்தமொழி
அன்னைத்
தமிழ்மொழி வேரிலை உணர்வீர்
அதுவே முதல்
மொழி பிறவில்லை !
திறமொழி உலகில்
ஒருசில உளவே !
திருந்திய தமிழே
முதல் மொழியாம் !
தென்னவர் செல்வ !
நற்றமிழ் மாந்த !
தெளிக ! முதல் மொழி தமிழ் மொழியே !
=========================================================
ஆக்கம் + இடுகை,
வை. வேதரெத்தினம்
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர் ,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ,
{திருவள்ளுவாராண்டு 2056, ஆடவை (ஆனி) 22}
{06-07-2025}
=========================================================