-------------------------------------------------------------------
கண்ணில் தெரியும் கதிரவன்
“உண்மை” கண்டது உரைத்தல்
“வாய்மை”யம்மா !
--------------------------------------------------------------------
உண்மை வாய்மை மெய்ம்மை மூன்றும்
.....ஒன்றென எண்ணல் சரியாகா !
கண்ணில் தெரியும் கதிரவன் ”உண்மை”,
.....கண்டது உரைத்தல் ”வாய்மை”யமா !
மண்ணுயிர் வாழ்க்கை கதிரவன் அருளால்,
.....மறந்திடத் தகுமோ இது”மெய்ம்மை” !
திண்ணிய வாய்மைத் திறமிகு வழியில்,
.....திருக்குறள் போற்றி ஒழுகிடுவோம் !
வள்ளுவ முனிவர் வாய்மையைச் சொல்லி,
.....வடித்தார் பத்துத் திருக்குறளை !
தெள்ளிய நல்லுரை அவரது சொல்லுரை,
.....தெவிட்டாத் தேனது பருகிடுவோம் !
ஒள்ளிய வாய்மை யாதெனில் தீமை
.....ஒன்றும் பயவா உரையாமே !
புள்ளியர் சொல்லும் பொய்மையும் வாய்மை
.....புரைதீர் நன்மை பயக்குமெனின் !
உடலைக் கழுவிடத் தண்ணீர் வேண்டும், !,
.....உளத்தைக் கழுவிட வாய்மை வேண்டும் !
அடல்மிகு வாய்மை அளித்திடும் நன்மை,
.....அமைதியை அழித்துக் தீய்த்திடும் பொய்ம்மை !
மடல்விரி தாமரை மணமாய் வள்ளுவம்
.....மயக்குது மனதைப் பருகுவம் வாரீர் !!
வடலியென் பாடலில் வளங்குறை வென்றால்,
.....வயமா நீவிர் பொறுத்தருள் வீரே !
----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]
{27-07-2022}
----------------------------------------------------------------------------