என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 17 மே, 2022

பாடல் (23) (1969) அன்புமிகு பூங்கொடி நீ (கணையாழி இதழுக்காக எழுதியது)

------------------------------------------------------------------------------------------

 கணையாழி இதழுக்காக எழுதிய கவிதை

                                                       (ஆண்டு 1969)

------------------------------------------------------------------------------------------

 

அன்புமிகு   பூங்கொடிநீ  அழுவதை  நிறுத்திவிடு !

…..அலைபாயும்  எனதுள்ளம்  அமைதியுடன்  வாழவிடு !

துன்பமிகு  நினைவுகளைத்   தூக்கி  எறிந்துவிடு  !

…..துயர்நீங்கி  நான்வாழத்   தூமணியே    சிரித்துவிடு  !

             

நன்றியுள்ள  நின்னிதயம்  நிலவைப்  பொழியவிடு  !

…..நலிந்துவரும்  எனதுள்ளம்   நலமுடனே  வாழவிடு  !

அன்றுமுதல்  இன்றுவரை  அருட்சுனையில்  மூழ்கிவந்தேன் !

…..அருமையுள்ள  தங்கையென  அன்புடனே  பழகிவந்தேன் !

             

தோன்றிவரும்  துன்பமெலாம்  துடைத்து  எறிந்துவந்தேன் !

…..துளிக்கூடக்  கவல்கொண்டு   துடித்து  வருந்தவில்லை !

கன்றிழந்த    தாய்ப்பசுவும்    கதறி  அழுவதுபோல்,

…..கனிமொழிநீ  மனமுருகிக்  கண்மயங்க  வாடுவதேன்  ?

             

அன்றலர்ந்த  தாமரைபோல்  அழகு  ததும்புமுகம்

…..அடிபட்டு  வீழ்ந்துவிட்ட  அன்றிற்  பறவையைப்போல்,

கன்றியுள்ள  காட்சிதனைக்  காணச்   சகிக்கவில்லை !

…..கண்ணீர்  பெருகிவரக்  கனன்று  துடிப்பதுவேன் ?

             

நின்முகம்  சிரித்திருந்தால்  நேயன்நான்  இன்புறுவேன்  !

…..நீசிரிக்க  மறுத்தனையேல்  நெஞ்சமதில்  நானழுவேன்  !

மானிடரின்  வாழ்வுதனில்  மரணமெனும்  துன்பமுண்டு  !

…..மனங்களிக்க  வாழுவதே  மாந்தரது  பண்பாடு  !

             

இம்மொழியை  நெஞ்சிருத்தி  இன்னல்  தவிர்த்திருந்தேன் 

…..இன்றுநீ  நினைவூட்டி  ஏழையெனை  வதைக்கின்றாய்  ! 

அம்புதைத்த  உள்ளமதை  அனல்கொண்டு  தாக்காதே  !

…..அன்பெனும்  பால்வார்த்து  அடியவனை  வாழவிடு  !

 

ஒன்றுபட்டு  வாழ்ந்திடுவோம்  !  உண்மைவழி  சென்றிடுவோம்  !

…..உளமார்ந்த  அன்பிற்கு  ஒளிமறைக்கும்  திரைவேண்டாம்  !

 

                 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 03]

{17-05-2022}

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக