என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 3 ஜூன், 2022

பாடல் (38) (1970) அன்புடன் அருள்தவழும் அவைத்தலைவர் (மா.சு.இராமமூர்த்தி) !

------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டையில் ஒரு திங்கள்மட்டும் பணியாற்றிவிட்டு

இடமாற்றலில் கோவை செல்லும் முதல்வர்

மா.சு.இராமமூர்த்திக்கு அளித்த தேனீர் விருந்தின்போது

நான் ஆற்றிய உரை !

(ஆண்டு 1970)

------------------------------------------------------------------------------------


அன்புடன்         அருள்தவழும்   

……….அவைத்தலைவர் அவர்கட்கும் !

அமைதியுடன்    எனதுரையைச்  

……….செவிமடுக்கும்    நண்பர்க்கும் !

இன்றுடன்        இம்மன்றத்      

……….தலைமைபெறும் தகையோர்க்கும் !

இனிமையுடன்    சுவையுண்டி     

……….ஈங்குதந்தப்       பேரவைக்கும் !

தலைவணங்கிக் கரம்குவித்துத்   

……….தருகின்றேன்     வணக்கம் !

தகைமையுடன்   ஏற்றிடுக !       

……….தமிழ்த்தாயே     வாழ்த்து !


-------------------------------------------------------------------------------------


காரிருள்         கரைந்து        வெள்ளிக்

……….கதிரொளி        வானில்        தோன்ற,

கூரிய           அலகைக்       கூப்பிக்,

……….கூவிடும்         கரிச்சான்        குஞ்சு !

ஆரிரோ          பாடும்          பெண்டிர்,

……….ஆடவர்           உறக்கம்         நீங்க,

பாருள            உயிர்கள்       வாழ்க்கைப்

……….பயணத்தைத்       தொடரும்        நேரம்,

பரிதியோன்       வந்தால்        என்ன ?

……….பசுங்கதிர்         சுட்டால்         என்ன ?

காரியம்          வேறே          இல்லை ,

……….கண்துயில்         நீங்கோம்        என்று ,

சீரிய           கடமை         கண்டும் ,

……….சிந்தனை         பிறழ்வோர்      தம்மை

கூரிய          கதிராம்         அம்பை

……….குணதிசைக்      கதிரோன்        வீசி

புரிதுயில்       மாந்தர்         தம்மை ,

……….புறங்கொளச்     செய்தல்         போல,

எழுகதிர்        தாங்கள்        வந்து ,

……….எழுப்பினை      துயில்வோர்     தம்மை !

விழுகதிர்       வேகம்          கண்டு ,

……….வியக்கிறோம்    வியன்மணி     வாழி !

 

கழுமுனை     அஞ்சும்         தீயோர்

……….கலங்குதல்        காணீர்        வாழி !

உழுபடைக்     கலனைக்       கொண்டு

……….உறக்கமே        கலையார்  நெஞ்சை ,

கொழுமுனைச்  சொற்கள்       தம்மால் ,

……….குதறினை      வாழிய !      வாழி !

எழில்மணிக்    கலசம்          போன்ற ,

……….எம்மனோர்       உள்ளம்    தன்னில் ,

அழியொணாக்  காவிய          மாக

……….ஆழமாய்ப்     பதிந்ததும்    என்னை?

பழிமொழி       கூறும்           மாந்தர்

……….பகைமையைப்   பெறினும்    தனது

வழிதனில்       பிறழாத்         தங்கள்

……….வலிமையை     வாழ்த்தும்  எம்மோர் ,

குழிவிழும்       கன்னம்         தன்னில் ,

……….குறுநகை         குலவச்     செய்து

பழகிய           தாங்கள்         இன்று

……….பறந்திடும்     நிலைதான்    என்னை?

மொழிபல        கூறி           எம்மை

……….முதனிலைப்     படுத்தும்     தாங்கள் ,

தழுவிய          நிலைதான்     என்னை ?

……….தாங்கொணாத்   துன்பம் !     துன்பம் !

விழிக்கடை        நீரைச்          சுண்டி

……….விடைதரும்      எம்மைத்     தங்கள் ,

சுழிமனச்         சூழல்           தன்னில்

……….சூழ்ந்திட          உரிமை      தாரீர் !

அழிமணல்       அடிகள்         அல்ல ,

……….ஆற்றிடைக்       குறையும்    அல்ல !

வழுவழுப்        பளிங்குக்       கல்லில்

……….வடித்தநற்        சிற்பம்     அன்றோ ?

வாழிய !         வாழி !          வாழி !

..........வளம்பெற       நீடு            வாழி !


------------------------------------------------------------------------------------

 

வானுயர்ந்த      கோடுதனில்     

……….குடியிருக்கும்     கூடு    அது

வழங்குகின்ற     தேன்சுவையை   

……….அறிந்தொழுகல்          பீடு !

கானடர்ந்த       பூமிதனில்       

……….ஓடிவரும்         ஆறு  - அதில்

கலந்துவரும்     மருந்துணவு     

……….மாந்துபவர்       பேறு !

மானிடரின்       வாழ்வுதனில்    

……….கூடிவரும்        இன்பம்  - சிறு

மலரனையக்     கூம்பிவிடும்     

……….மறுபொழுதோ       துன்பம் !

கனியுறங்கு            மணிவிதையாய் 

……….மெய்ப்பொருள்கள்  கோடி - உலகில்

கற்றுணர்ந்து     வழிநடத்தும்    

……….நற்பணிகள்       நாடி !

நனிசிறந்த       எண்ணமதை    

……….நெஞ்சமதில்      ஏந்தி  -  இங்கு

நடந்துவந்த      எந்தலைவா !    

……….பிரிந்தனையே     நீந்தி !

பனிமலரும்      கதிரவனும்      

……….உறவுகொளல்    போல  - தாங்கள்

பழகிவிட்டுப்      பிரிவதனால்    

……….வருந்துகிறோம்      சால !

 

-------------------------------------------------------------------------------------

 

அன்னத்தின்      தூவி          போல,

……….அனிச்சப்பூ       இதழைப்       போல,

வண்ணங்கள்     காட்டும்       நீல

……….வான்பனி         நீரைப்          போல,

நெருஞ்சியின்     மலரைப்      போல,

……….நீள்கடல்          நுரையப்        போல,

அருந்தமிழ்       நெஞ்சம்       கொண்ட

……….ஐயன்மீர்          வணக்கம் !      நன்றி !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 20]

{03-06-2022}

-------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக