-------------------------------------------------------------------------------------
பனிபடர்ந்த மலையின் மீது
படுத்திருந்தேன் சிலையைப் போலே”
என்னும் கண்ணதாசனின் கவிதையைத் தழுவி
எழுதிய ஒரு பாடல் !
(மெட்டுக்குப் பாட்டு)
(ஆண்டு.1970)
--------------------------------------------------------------------------------------
பால்பொழியும் நிலவொளியில்
…..படுத்திருந்தேன்
ஓர்நாள் – தூய
…..…பளிங்கினிலே வடித்தமலர்ப்
……..…பதுமையொருத்தி வந்தாள் !
வேல்விழிகள் இரண்டுமெனை
..…வீழ்த்தமையல் கொண்டேன்
- அவள்
…..…வெட்கமுடன் அருகமர்ந்து
……..…முத்தமொன்று தந்தாள் !
கன்னமெனும் மாதுளைகள்
..…சிவந்திருக்கக் கண்டேன் !
– அவள்
…..…காந்தள்விரல் கொண்டுஅதை
……..…மெல்லமூடி நின்றாள் !
மின்னுகின்ற பல்வரிசை
…..முத்துக்களோ என்றேன் ! –
அவள்
…..…மெல்லநகை செய்துவேறு
……..…என்னவேண்டும் என்றாள் !
தேனொழுகும் கொவ்வையிதழ்
…..ஏனடியோ என்றேன் ! –
அவள்
……..தித்திக்கின்ற அமுதமதை
……..…வழங்குதற்கு என்றாள் !
கூன்பிறையாம் புருவங்களைக்
…..கொடுத்துவிடு என்றேன் ! –
அவள்
…..…கொஞ்சலாக மன்னவனே
……..…மலர்க்கணையது என்றாள் !
கார்குழலில் மழைமுகிலைக்
..…கவர்ந்ததுஏன் என்றேன் ! –
அவள்
…..…கண்துயிலும் தலைமகனின்
……..…பஞ்சணையாம் என்றாள் !
நீர்மலரும் தாமரைப்பூ
..…மேனியடி என்றேன் ! –
அவள்
…..…நீரணைத்து மகிழ்வதற்கு
……..…வழங்கிடுவேன் என்றாள் !
மின்னலிடை நெளிகிறதே
..…ஏனடியோ என்றேன் ! –
அவள்
…..…மாலையாக நின்கரத்தில்
……..…விழுவதற்கு என்றாள் !
அஞ்சுகமே ! ஆயிழைநின்
.....பெயரெதுவோ என்றேன் ! - அவள்
…..…அமைதியுடன்......................என்று
……..…ஒருமுறைதான் சொன்னாள் !
கஞ்சமலர் உடல்தழுவி
.....இடைத்துகிலைத் தொட்டேன் - ஆனால்
…..…கருங்குருவி ஒலியெழுப்பக்
……..…கனவுகலைந்து
நின்றேன் !
------------------------------------------------------------------------------------
{03-06-2022}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக