திருமண வாழ்த்து
மணமகன்: மணமகள்
ச.முருகன் செ.சுபா மணநாள்:
திருவள்ளுவர் ஆண்டு 2027, வைகாசி, 9, புதன்கிழமை
(23-05-1996)
-----------------------------------------------------------------
வள்ளுவம் என்னும் வான்மறை தந்த,
தெள்ளிய சான்றோன் திருப்புகழ் கூறும்
ஈரா யிரத்து இருபத் தேழெனும்
ஆரா ஆண்டு, அணிவை காசி,
ஒன்ப தாம்நாள், உறுபுதன் கிழமை,
பொன்மனச் செம்மல், புகழுடம் பெய்திய
செல்லை யாவின் செல்வத் திருமகள்,
வல்லிப் பாவை, வளர்தமிழ்ச் செல்வி,
திருவளர் நங்கை தேவிசு பாவும்
அருள்மொழி நம்பி அறிவொளி முருகனும்
இல்லற வாழ்வில் இணைந்தமை வாழ்த்தி,
சொல்மணிச் சரமதைச் சூட்டுவன் வாழ்க !
திருமணம் புரிந்தஎம் தென்னவர் செல்வ !
ஒருமனம் கொண்டு உயர்வுடன் வாழ்க !
அணைவிழு நீராய் ஆற்றலும் வளமும்,
இணைந்துற வாழ்க ! ஏற்றமும் சூழ்க !
செல்வமும் பொருளும் செழிப்புற வாழ்க !
நெல்மணி பொன்மணி நித்தமும் சேர்க !
ஆல்போல் வாழ்க ! அறுகென வளர்க !
மாலவன் அருளால் மங்கலம் நிறைக !
பீடுற வாழ்க ! பெற்றோர் மகிழ்வுற,
நீடுற வாழ்க ! நிறையாண் டுவாழ்க !
இல்லறம் ஏற்றிடும் இணையே !
நல்லறம் போற்றி நலமுடன் வாழ்கவே !!
நாள் : 01-06-1996 அன்புடன்,
நகர் : மறைமலைநகர் வை.வேதரெத்தினம்
------------------------------------------------------------------------------------------
(நினைவில் வாழும் என் அன்பு நண்பர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் திரு. சு.செல்லையா (Superintendent, Directorate of Employment and Training, Chepauk, Chrnnai 600 005) அவர்களின் அன்பு மகள் செல்வி சுபா திருமணத்தை முன்னிட்டு நான் வாசித்து அளித்த வாழ்த்து மலர்)
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக