என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

பாடல் (81) ஆட்சிமொழி தமிழென்றார் ஐம்பத்து எட்டுமுதல் ! ஆயினும் நடைமுறையில் செயல்முறையில் விரைவில்லை !

06-09-2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு புலவர் பேரவையின்  இணையவழிப் பாட்டரங்கில்  முன்னிலை வகித்து நான் படைத்த பாடல் ! 

------------------------------------------------------------------------------------------------


ஆட்சிமொழி    தமிழென்றார்     ஐம்பத்து     எட்டுமுதல் !

.....ஆயினும்  நடைமுறையில்  செயல்முறையில்   விரைவில்லை !

மாட்சிமிகு    அமைச்சர்கள்,   மாணவர்கள்,     அலுவலர்கள்

.....மனம்வைத்தால்  செயலாக்கம்  விரையாதோ ?  வளராதோ ?

 

ஊருக்கு      ஊர்கூட்டம்       கூடுகிறோம்    பேசுகிறோம் !

.....உருப்படியாய்     ஏதேனும்      சொல்லாக்கம்  நடந்ததுவா ?

பேருக்குச்      சிலபேர்கள்       கருத்தரங்கு   ஏறியதால்

.....பெற்றபயன்      யாதோகாண் !   பெரியீரே     சிந்திப்பீர் !

 

தமிழ்நாட்டில்   தமிழுணர்வு  நாள்தோறும்   குறைகிறது !

.....தமிழ்க்கல்வி   நிலையங்கள்   ஒவ்வொன்றாய்  மறைகிறது !

அமிழ்தான    மொழிவடிவம்    ஊடகத்தால்    சிதைகிறது !

.....அய்யகோ      இதைத்தடுக்க    அரசினர்க்கும் பொழுதில்லை !

 

பொங்குதமிழ்     அங்காடிப்     பலகைகளால்     வீழ்கிறது !

.....புற்றீசல்    போல்பதின்மப்    பள்ளியெங்கும்     சூழ்கிறது !

தங்குதடை     இன்றிதமிழ்ப்    பேசுதற்கு     ஆளில்லை !

.....தரமில்லா   தாளிகைகள்   மொழிக்கலப்பில் மூழ்குதையா !

 

ஆன்றோரே !    சான்றோரே !    அரங்கிலுள்ள  நாவலர்காள் !

.....அன்னைமொழி    நலிவடைதல்  அழகாமோ ? அறமாமோ ?

மன்பதையில்   நம்மொழியும்   மாண்புதனைப்   பெறவேண்டும் !

.....மனம்வைத்தால் அத்துணையும் வயமாகும் ! இஃதுண்மை !

 

கலைச்சொற்கள்   தமிழூற்றில்   ஊருணியாய்   வரவேண்டும் !

.....கற்றோர்தம்     கடனாற்றி    மொழிக்கேற்றம்  தரவேண்டும் !

அலையலையாய்  பிறசொற்கள்  மொழிமாற்றம்  பெறவேண்டும் !

…..அன்னைத் தமிழ்மொழி நம் உயிருக்கு நிகரன்றோ ?

 

அன்னைத் தமிழ்துறந்து ஆங்கிலத்தைக் கொண்டாடும்

…..அறிவிலிகாள் உமைத் தமிழர் எனவுரைத்தல் பேரிழிவு !

இன்னமுதத் தமிழ் நமது உயிருக்கு  நிகர் நேர் நேர் !

……ஏமாளித் தமிழர்களே இனியேனும் ! திருந்திடுவீர் !

 -------------------------------------------------------------------------------------

                                     ஆக்கம் + இடுகை:
               

                                   வை.வேதரெத்தினம்,

                            (vedarethinam70@gmail.com)

                                              ஆட்சியர்,
                   
                            "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

      [திருவள்ளுவராண்டு: 2056, மடங்கல் (ஆவணி) 22]

                                             {07-07-2025}

------------------------------------------------------------------------------------  

 

 

 

 

 

ஞாயிறு, 6 ஜூலை, 2025

பாடல் (80) இன்றைய உலகில் வழங்கும் மொழிகள் ஏழாயிரத்து இருநூறாம் !

தமிழ்நாடு புலவர் பேரவை சார்பில் 05-07-2025 அன்று மாலை  7-00 முதல்  8-30 வரை நடைபெற்ற இணையவழிப் பாட்டரங்கில் முன்னிலை வகித்து 
"முதல் மொழி" என்னும் தலைப்பில் நான் வாசித்த  பாடல் ! 

---------------------------------------------------------------------------------------------------------------------------

  முதல் மொழி !

 

இன்றைய உலகில் வழங்கும் மொழிகள்

      ஏழா  யிரத்து இருநூ  றாம்  !

            இவற்றுள் முதல்மொழி என்னும் தகுதி

                  எந்தமிழ் மொழிக்கே உரித்தாகும்!

 

தொன்று தொட்டு உயிர்ப்புடன் வாழ்பவை 

      தமிழும் சீனமும் எனச் சொல்வர்

            துல்லியமாகச் சொல்வது அரிது !

                  தமிழின் அகவைபல் ஆயிரமாம்  !  

 

இலக்கணம் தன்னைத் தனக்கு வகுத்த

      முதல் மொழி எங்கள் தமிழ்மொழியே

            இலக்கிய வளத்தில் தொன்மை வாய்ந்தது !

                  எங்கள் தமிழ்மொழி ! முதல்மொழியே !

 

நிலமும் நீரும் தோன்றிய போதே

      முகிழ்த்தது எங்கள்  தமிழ் மொழியே !

            நிலவும் வானும் காற்றும் மீனும்

                  நித்தமும் ஆய்ந்தது  தமிழ்  மொழியே !

 

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் 

      என்றுரை மேன்மொழி  சொன்ன  மொழி !

            யாண்டும் இடும்பை இலவெனும் நிலையை

                  எய்திட நெறியுரை  தந்த  மொழி !  

 

ஓதும் நாளும் அறிவியல் ஆய்வில் 

      மூழ்கிய  முதல்மொழி  தமிழ் மொழியே !

            உரைத்தது அன்றே வலவன்  ஏவா

                  உயர் வான் ஊர்தியைச் சொன்ன மொழி !

 

அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்

      அவ்வையின்  கூற்று  நம்  மொழியே !

            அற்றம் காக்கும் கருவி அறிவென

                  அறைந்ததில் முதல் மொழி தமிழ்மொழியே !

 

அன்பிற் கில்லை அடைக்கும் தாழென

      ஆண்டீ ராயிரம் முன்சொன்  னார்  !

            அதுவே எம்மொழி முதல்மொழி தமிழ் மொழி

                  உலகில் தோன்றிய முதல் மொழியே !

 

விருந்து    புறத்தில்    இருந்திட  உண்ணா

      வியநெறி  சொன்ன  முதல் மொழியே  !

            வெற்றியின்  இலக்கை  எய்திட முயற்சி

                  வேண்டும் எனவழி சொன்னமொழி !

 

மருந்தென  வேண்டா  அருந்திய  உணவு 

      மறைந்தது  அறிந்து  உண்பீரேல்

            மருத்துவ அறிஞன் வள்ளுவன் வாய்மொழி

                  மாண்புடன் நிறுவிய  முதல்மொழியே !

 

அறவழி,   அறிவியல்  நெறிவழி,  உலகில்

      அறிவினை அடைவழி உரைத்தமொழி

            அன்னைத் தமிழ்மொழி  வேரிலை உணர்வீர்  

                    அதுவே முதல் மொழி பிறவில்லை !

 

திறமொழி  உலகில்  ஒருசில  உளவே !

      திருந்திய   தமிழே  முதல்  மொழியாம் !

            தென்னவர் செல்வ ! நற்றமிழ் மாந்த ! 

                  தெளிக ! முதல் மொழி தமிழ் மொழியே !

 =========================================================

ஆக்கம் + இடுகை, 

வை. வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர் ,

"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ,

{திருவள்ளுவாராண்டு 2056, ஆடவை (ஆனி) 22} 

{06-07-2025}

=========================================================

 


சனி, 14 ஜூன், 2025

பாடல் (79) செய்வோம் சிறந்த பல தொண்டு !

  கொத்து (01)                                                                    மலர் (019)

------------------------------------------------------------------------------------------------------------
      தமிழரசு  இதழுக்கு  செய்வோம்  சிறந்த
          பல தொண்டு” என்பதை ஈற்றடியாக
                      வைத்து எழுதி அனுப்பிய 
                                வெண்பாக்கள் !
                                                           (ஆண்டு 1970)
------------------------------------------------------------------------------------------------------------


           கொய்வோம்  அருங்கனியாம்  அண்ணாவின்   கருத்துரைகள்
           பெய்வோம்    பிழையறியா    உள்ளமதில்  ---   ஆய்ந்துணர்ந்து
           உய்வோம்;    அவர்சென்ற     உண்மைவழி     நாம்தொடரச்
           செய்வோம்    சிறந்தபல       தொண்டு !

           
           மெய்மைப்   பொருளுணர்ந்து  மேதினியில்     நாம்வாழ
           பொய்மைச்  சுழல்நீந்திப்        போவதலால் --- வாய்மையெனும்
           பாய்மம்      பொங்கிவரப்      பார்மிசையில்   வாழ்வதுடன்
           செய்வோம்  சிறந்தபல          தொண்டு !


           ஏய்க்கும்    நரிமதியில்     எய்திடுவோம்     கூரம்பு
           மாய்க்கும்  வறுமைப்பேய்  மாண்டுவிழ   ---  நாய்க்குணவாய்ப்
           பெய்யும்    கழுநீரைப்       பிச்சைகொளும்  நிலைமாற
           செய்வோம் சிறந்தபல       தொண்டு !


           காஞ்சித்     தவப்புதல்வன்  கண்மணியாம்   அண்ணாபோல்
           வாஞ்சை    மிகக்கொண்டு  வண்டமிழை ---  நெஞ்சமதில்
           ஆய்வோம்;  உயிர்மூச்சாய்  ஆக்கிடுவோம்    மேதினியில்
           செய்வோம்  சிறந்தபல       தொண்டு !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி"  முகநூல்.

திருவள்ளுவராண்டு 2056, விடை (வைகாசி) (31)

14-06-2025 

--------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 12 ஜூன், 2025

பாடல் (78) அருட்டிரு வாசுதேவனாருக்கு மீ. கோவிந்தராசுவின் விண்ணப்பம் !

 

1980 -  ஆம் ஆண்டு வாக்கில்  தான் பணிபுரிந்த தொழிலகத்திலிருந்து  விடுபடும் பொருட்டு, தொழிலக உரிமையாளர் அருட்திரு வாசுதேவனார் அவர்கட்கு மீ. கோவிந்தராசு  அணிவித்த  நன்றிப் புகழ்  மலர் !

=======================================

(பாடல் புனைவு: வை. வேதரெத்தினம்) 

=======================================

அன்பைச்  சொரிந்து வரும் அருவி ! -- கருணை

      அழகு ததும்புகின்ற ஊற்று ! – ஒளிரும்

பொன்னில் உறவு கொண்ட மேனி ! – விழியில்

      பொங்கி வழிந்து வரும் நிலவு ! – எனது

நெஞ்சில் குடிபுகுந்த தென்றல் – அழியா

      நினைவில் வளர்ந்துவரும் கவிதை ! – அழகு

கொஞ்சும் இளம்பரிதி உதயம்  -- மின்னும்

      கூடல் இறைமகுடக்  கலசம் ! !

 

பொங்கு  மாங்கடலில்  துஞ்சி விழிதிறந்து,

       பொன்னின் மணியிறைக்கும் சுடரோன் ! – தரணி

எங்கும்  உயிரினங்கள் உயிர்த்து எழுச்சிபெற,

       இறைமை  செய்துவரும் அருளோன் ! -- ஆற்றல்

மிஞ்சும்  தொழிலகத்தின் உரிமைத் தவிசினிலே,

       அமர்ந்து  கோலோச்சும்  தலைவா !  - உம்மைத்

தஞ்சம் எனவடைந்து கெஞ்சும் இளையவனை

       “அஞ்சேல்” எனவுரைத்து அருள்க ! !


கஞ்சு இளங்குயிலின் குரலைக் கேட்டுமனம்

       குளிர்ந்து அன்பைத்  தந்து அருள்க !

பஞ்சு விழிக்கடையில் கெஞ்சும் நீர்த்துளிகள்

       படைக்கும் எளியமொழி கேளீர் ! --  மனம்

அஞ்சித்  துடிதுடித்து  அயர்ச்சி  கொண்டஎனை

      “அஞ்சேல்”  எனவுரைத்து  அருள்க !

 

வணிகத் துறையின் அடிமுடியறிந்த 

      வயமாப் பெருந் திறலோய் ! – மடல்

             வாடியபயிரின் சோர்வினைச் சகியா 

                   வளம்பொதி நீரூற்றே !

துணிவுடன் வினைகள் துல்லியமாகத் 

      துளங்கிடக்க செய்தலைவா – நின்

             தூமொழியால் எனை  ஆசீர்வதித்து 

                   அருள்செய் தருள்வாயே !

 

பிணிசூழ் நெஞ்சில் விழிநீர் துடைக்கும் 

      பேரருள் தகையோயே -இப்

            பிள்ளையின் மனதில் ! என்றும் நீங்காப் 

                  பேரிடம் கொண்டனையே !

பணிமனை தன்னில்  அணிமலராகப் 

       பழகிடும் திருமலரே ! – சிறு

              பாலகன் உரைக்கும் நன்றிகள் ஏற்று 

                    ஆசிகள் அருள்வாயே !

 

என்றும் தங்கள் ஆசியை வேண்டும்,

 மீ. கோவிந்தராசு, 

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(12 -06-2025)

-------------------------------------------------------------------------------------------

00-00-1980