என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 27 பிப்ரவரி, 2023

பாடல்(66) “இல்” என்றால் “பெண்” என்றும் பொருள் உண்டு காணீர் !

 

இல்என்றால்இல்லையென்று பொருளுரைக்கும் மனிதா !

 ………“இல்என்னும் சொற் பொருட்கு வரம்பு ஏதும் உளதா ?

இல்என்றால்இடம்என்று பொருளுண்டு காணீர் !

………”இல்என்றால்வீடென்றும் உரைத்திடுவர் கேளீர்  !

இல்என்றால் மனை வாழ்க்கைஎனப் புகல்வதுண்டு !

………”இல்என்றால் சோதிடத்தில் இராசியைச் சொல்வ துண்டு !

இல்என்றால் எதிர்மறை இடைநிலையாம் என்பர் !

………”இல்என்றால் விகுதி உருபு என்பார் சில அன்பர் !

இல்என்றால் தலைவிஎன்றும் சொல்வான் நம் மாந்தன் !

……….”இல்என்றால்பெண்என்றே நிறுவிட நான் வந்தேன் !

 இல்என்றால் நற்றவத்தாய்” ! நமையீன்ற அன்னை !

……….”இலையென்றால் நம்வாழ்வில் வளமில்லை ! தொல்லை !

இல்என்றால் அன்னை ! அவள்  அன்பிற்கு  ஏதெல்லை ?

………இல்லத்தில் தாயிலையேல் அஃதுதொரு  பாழ்ங்கொல்லை ?

 இல்என்றால் நல்வாழ்க்கைத் துணைவி என்றும் பொருளாம் !

………..”இல்லத்தில் ஒளி பெருக்கும் எழில்விளக்காம் மனைவி ?

இல்என்றால்இல்வாழ்வில் எழில் சேர்க்கும் பெண்ணாள் !

…………இல்லத்தில் மனைவியிலை என்றால் அது வாழ்வா ?

இல்என்னும் இல்லாளின் பெருமைக் கேதெல்லை ?

………..”இல்என்றால் பெண்ணெண்று இயம்புவதும் தவறோ ?

 இல்என்னும் பெண் வடிவில்  தமக்கையரும் உண்டு !

……….”இல்என்னும் சொற்பொருளில் இளங்கிளையும் உண்டு !

இல்என்னும் ஈரெழுத்துள் அண்ணியரும் உண்டு !

……….“இல்என்னும் வடிவுக்குள்பாட்டிகளும் உண்டு !

இல்என்னும் சொல்லுக்குள்ஆசிரியைஉண்டு !

………….”இல்என்றால் பெண் என்று உரைப்பதுவும் தவறோ ?

இல்என்னும் சொல்லுக்குப் பொருளுரைக்க வல்லீர் !

………….”இல்என்னும் சொல்லுக்குள் எந்தப் பெண் இல்லை ?

இல்என்று சொன்னாலேபெண்என்று பொருளாம் !

………..”இல்என்னும் சொல்லுக்கு உயிர் வடிவம் பெண்ணே !

 இல்என்னும் சொல்லுக்கு இலக்கணம் தான் பெண்ணே !

………”இல்என்னும் சொல்லுக்குள் வாழ்பவளே பெண்ணே !

இல்என்னும் உடலுக்கு உயிர்தருதல் பெண்ணே !

……….”இல்என்னும் சொல்லுக்குப் பொருள்தருதல் பெண்ணே !

இல்என்னும் குடிலுக்கு முகவரியே பெண்ணே !

……….”இல்என்னும் கலைக்கோயில் ஆசிரியை பெண்ணே !

இல்என்னும் கோயிலுக்குள் இறைவடிவம் பெண்ணே !

……….”இல்என்னும் மனைவாழ்வின் நாயகியே பெண்ணே !

இல்என்னும் அருட்சுனையின் சுவை நீரே பெண்ணே !

………”இல்என்னும் அன்புலகின் உயிர்மூச்சே பெண்ணே !

 இல்என்னும் ஈரெழுத்துள்  இவ்வுலகம் அடங்கும் !

……”இல்என்னும் பெண்மையில்தான் எவ்வுயிரும் தொடங்கும்

இல்என்னும் உயிர்க்கூட்டால்  இவ்வுலகம் வாழும் !

………”இல்என்னும் பெண்ணிலையேல்,உலகுருண்டை அழியும் !   

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ச் சிப்பி” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2054, கும்பம் (மாசி) 15]

{27-02-2023}

---------------------------------------------------------------------------------------------