--------------------------------------------------------------------------------------
பாபநாசத்தில் மலர்ந்த பாரிசாதம் !
பொங்கல் மணம்
பரப்பும் பூங்காற்று
பொங்கல் வாழ்த்து !
==================================================
செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து
ஓங்க,
செவ்வாழைக் குலைதள்ளிக் கனிந்து தூங்க,
பைங்கமுகு ஓலையிலே தென்றல் காற்று
பண்ணிசைக்க; இளங்குருத்து மஞ்சள் நாற்று,
பொன்னிவிளை வெண்ணுரையைப் பூவாய்ச்
சூடும் !
பூங்குயில்கள் சோலையிலே கீதம் பாடும் !
ஆதவனும் வைகறையின் இருளைப்
போக்க,
அன்னையவள் நீராடித் திலகம் இட்டு,
பச்சரிசிக் களைந்தெடுத்துப் பாலும் வார்த்து,
பைந்தெங்கின் பூவெடுத்துப் பருப்பும்
சேர்த்து,
சர்க்கரையும் முக்கனியும் கரும்பின் சாறும்,
சாதிக்காய் குங்குமப்பூ ஏலக் காயும்,
மங்கலமாய்ப் பானையிட்டுப் பொங்கும் காலை,
மறத்தமிழர் உள்ளமெலாம் மகிழ்ச்சி பொங்கும் !
உழைத்துக் களைத்துவிட்ட உள்ளம்
பொங்கும் !
உருக்குலைந்த மேனியிலே பொலிவும் துள்ளும் !
அலைக்கழித்த துன்பமெலாம் அகன்று ஓடும் !
ஆனந்த வெள்ளமதில் உலகம் ஆடும் !
உழவரது திருநாளாம் இப்பொங்கல் நாளில்,
உயர்ந்திடவே வாழ்த்துகிறேன் நீவிர் வாழி !
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
”தமிழ்ச் சிப்பி”
வலைப்பூ,
திருவள்ளுவராண்டு: 2053, மீனம்,(பங்குனி)26]
{09-04-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக