என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

பாடல் (08) (1965) எருதிரண்டைத் துணையாக்கி !

 

--------------------------------------------------------------------------------------

        பாபநாசத்தில் விளைந்த பைங்கூழ் !

                 (1965-ஆம் ஆண்டு எழுதிய பாடல் !

                 பொங்கல் வாழ்த்து !

--------------------------------------------------------------------------------------

 

               எருதிரண்டைத்   துணையாக்கி

                   ஏர்முனையின்    காலடியில்

                        இயங்கும்       மாந்தன்,

 

               குருதிதனைக்     கழனிதனில்

                   கொட்டிவிளை    கதிர்மணிகள்

                        குதிரில்         சேர்க்க,

 

               துரிதியங்கும்     தாரணியின்

                   தூமடியில்       ஆசிகளைத்

                        தூவிச்          செல்லும்,

 

               பரிதியவன்         பூவுலகின்

                   பாதிதனைத்       தாண்டிவடல்

                        பார்க்கும்        நன்னாள் !

 

 

               உள்ளத்தின்       கதவுகளை

                   உறுதியுடன்       தாளிட்டு

                        உழைப்பைத்    தேடி,

 

               பள்ளமதில்,       சேறுதனில்,

                   பணிமனையில்,   காடுகளில்

                        பாயும்          நீரில்,

 

               கள்ளமிலா        நெஞ்சமுடன்

                   கால்கடுக்கக்      கைநோவக்

                        காயும்          மாந்தன்,

 

               பிள்ளையுடன்     மனைவிமனைப்

                   பெருங்கிளையும்  கூட;இன்பம்

                        பெருகும்        நன்னாள் !

                இனிய  பொங்கல்  புதுநாள்; 

                          இனிக்கும் தமிழர் திருநாள் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 27]

{10-04-2022}

 -----------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக