என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 3 மே, 2022

பாடல் (18) (1968) மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு !

-------------------------------------------------------------------------------------

பேரறிஞர்  அண்ணா

மறைந்த காலை எழுதிய

கவிதை

(1968 –ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

------------------------------------------------------------------------------------

 

மாற்றான்    தோட்டத்து   மல்லிகைக்கும்   மணமுண்டு !

.....மறவாதே  என்றதமிழ்  மன்னவனும் சென்றுவிட்டான் !

தூற்றான் ;  அயலாரைத்  துன்புறுத்த   நினையாதான் !

.....தோழமையாய்  வாழுதற்குத் தூதனுப்பிச்  சென்றுவிட்டான் !

தோற்றான் ; உயிர்ப்போரில்  துஞ்சிவிட்டான்; சென்றுவிட்டான் !

.....தூமலரில்  தேன்துளியாய்  தோன்றியவன்  வீழ்ந்துவிட்டான் !

காற்றான்   மழையான்   கலக்கமுறாக்   கஞ்சமலர் ;

.....காலமகன்  அடிபட்டுக்  கடற்கரையில்  துஞ்சுதுகாண் !

 

எதையும்  தாங்கவல  இதயமேன்  வேண்டுமென்று,

.....இயம்பிவழி  காட்டிவந்த  ஏகலைவன்  சென்றுவிட்டான் !

கதையும்  கற்பனையும்  கண்ணியமாய் இழையோட,

.....கருத்துமழை  பெய்துவந்த  கரிகாலன்  சென்றுவிட்டான் !

சிதையும்  மொழியார்வம்  சீர்படுத்திச்  சென்றுவிட்டான் !

.....செந்தமிழால் யாவரையும் சிறைசெய்தான் ; துஞ்சிவிட்டான் !

தசையும்   உயிரும்போல்  தமிழ்க்கொடியில்  பூத்தமலர்,

.....தலைசாய்ந்து  பூமகளின்  திருவடியில்  துஞ்சுதுகாண் !

 

கடமையுடன்  கண்ணியமும்  கட்டுப்பா  டும்காத்து,

.....காசினியில்  வாழவழி  காட்டியவன்  சென்றுவிட்டான் !

மடமைத்தீ  மூட்டிவரும்  மாந்தனது  இறையுணர்வின்

.....மாசுதனை  நீக்கவந்த  மறத்தலைவன்  சென்றுவிட்டான் !

தடம்புரளாப் பகுத்தறிவுத்  தமிழ்ச்செல்வன்  சென்றுவிட்டான் !

.....தனித்தமிழன்  ஆட்சிகண்ட  தலைமகனும்  சென்றுவிட்டான் !

குடங்குடமாய்க்  கண்ணீரில் குளித்தெழுந்து  வெண்மணலில்,

.....குடியிருக்கச்  சென்றுவிட்டான் குமுகாயம்  வாடுதுகாண் !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 20]

{03-05-2022}

----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக