=================================================
ஒரு திரைப் படத்தில் இடம்பெற்ற காட்சியை
அடிப்படையாக
வைத்துப் புனையப் பெற்ற கவிதை !
(1968-ஆம் ஆண்டு எழுதப்பெற்ற கவிதை)
=================================================
மின்னல்
கொடியழகே ! மாமயிலே ! மேகலையே !
பின்னல்
கருமுகிலின் பெட்டகமே ! பேரழகே !
சன்னல் கதவருகே சாய்ந்திருக்கும் சண்பகமே !
காதல் கணைவீசிக் கதைபேசும்
காரிகையே !
கூதல் பருவத்துக் குளிருடலை
வாட்டுதடி !
மோதல் விலக்கிவிடு ! முல்லைநகை
காட்டிவிடு !
நோதல் அழகாமோ ? நூலிடையே !
தாளையெடு !
வெள்ளைப் பல்வரிசை ! விரிந்தசுளைக் கொவ்வையிதழ் !
கள்ளைச் சுமந்திருக்கும் காந்தட்பூ வெண்டைவிரல் !
பிள்ளை மழலைமொழி பேசுமிரு
கயல்விழிகள் !
கொள்ளை எழில்பெருகும் கோபுரமே
தாளையெடு !
பட்டுப் புடவைதனில் பத்துநிறம்
எட்டுவகை !
கட்டுக் கணுக்கரும்புக் கைகளுக்கு
நான்குவளை !
மொட்டுக் கதலியுறு
முல்லைவடம் மூன்றுவகை !
கொட்டிப் பூமகளே !
குவித்திடுவேன் ! தாளையெடு !
அள்ளி அலங்கரிப்பேன் ! ஆரணங்கே !
ஆயிழையே !
துள்ளித் துடித்துவிழும் தூயவிழி மான்மறியே !
வெள்ளிக் கதிர்நிலவே ! விண்ணுலவும் தாரகையே !
வள்ளிக் கிழங்கேயென் வைரமணி நீயிலையோ ?
கரும்புச் சாறெடுத்துக் கற்கண்டு, தேன்கலந்து !
அரும்பும் இதழாக ஆக்கியஎன் பொற்சிலையே !
விரும்பும் பொருள்யாவும் விடிந்தவுடன் தந்திடுவேன் !
இரும்புத் தாள்திறவாய் ! என்னுயிரே ! தாளையெடு !
--------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
[திருவள்ளுவராண்டு: 2053,மேழம் (சித்திரை) 20]
{03-05-2022}
--------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக