என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 9 மே, 2022

பாடல் (20) (1968) அன்புடன் அருள் தவழும் (கணேசன்) !

-----------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டையிலிருந்து  தாராபுரத்திற்கு

இடமாற்றலான

இளநிலை உதவியாளர திரு. வை. கணேசனுக்காக

ஏற்பாடு செய்யப்பெற்ற தேநீர் விருந்தில்

நான் ஆற்றிய உரை.

(ஆண்டு 1968) 

-----------------------------------------------------------------------------------------

 

அன்புடன்      அருள்தவழும்    

.....அவைத்தலைவர்    அவர்கட்கும் !

அமைதியுடன் எனதுரையைச்   

.....செவிமடுக்கும்     நண்பர்க்கும் !

இன்றுடன்    இம்மனையை     

.....இழிந்துசெலும்       ஏந்தற்கும் !

எழுத்தராய்ப்     பணிபுரிய       

.....இவண்புகுந்த      தையற்கும் !

இனிமையுடன்   சுவையுண்டி      

.....ஈங்குதந்த          பேரவைக்கும் !

தலைவணங்கிக்  கரம்குவித்துத்  

.....தருகின்றேன்      வணக்கம் !

தகைமையுடன்  ஏற்றிடுக !     

.....தமிழ்த்தாயே           வாழ்த்து !

    

-----------------------------------------------------------------------------------

 

ஈரெட்டுத்         திங்கட்கு        

.....இணையாக       இம்மனையில்

எழுத்தராய்ப்     பணிபுரிந்து       

.....இன்றுமுதல்      இடம்மாறி 

தாராபுரம்         செல்லும் 

.....தண்ணிலவே ! கண ஈசா     !

தவிக்கின்ற       நெஞ்சமதைத்  

.....தருகின்றேன்    காண்பாய் நீ   !!

பதிவுசெய்        துறைவிலகிப்    

.....பணிவிழைந்து   இவண்போந்து

பதவியாம்        பலகணியில்     

.....பணியேற்றீர்     எழுத்தரென !

புதியபல        கேண்மையுடன்  

.....பொற்புடனே     நீர்பழகி,

பொலிவுறுவல்   என்றெண்ணிப்   

.....புத்துவகை       கொண்டிருந்தேன்!

 

ஏனென்று         தெரியவிலை    

.....எனதெண்ணக்    கோட்டையெலாம்

இடிந்தின்று       சரிந்துவிழ       

.....ஏகுகிறீர்          வெகுதொலைவு !

மான்தானோ     மருளடைய ?  

.....மாங்குயிலோ    மறைந்தோட?

மல்லிகையோ   வாடுதற்கு ?    

.....மணிவிளக்கோ   சுடர்வீழ ?

 

வான்முகிலோ   கலைந்தோட ?   

.....வண்ணவில்லோ மறைந்துவிட ?

வண்ணத்துப்     பூச்சியோ         

.....வாட்டமுற ?      வளர்மழலை,

பொன்னுடலோ   கன்றிவிட ?      

.....பூவிழியோ       சோர்ந்துவிழ ?

புரியவிலை !     கேள்விதனைப்   

.....புரியவிழ்த்துச்    சென்றிடுவாய் !

 

ஆர்வமுடன்      அண்டையுள     

.....அன்பர்கள்தம்    நற்பணியை,

ஆன்றவிந்த      அலுவலர்கள்    

.....அடைந்திருக்கும் செயலறிவை,

ஓர்மையுடன்     உன்னித்து        

.....உளமிருத்தல்     உவராமல்,

ஓடியதேன் ?     ஆடியதேன் ?     

.....உற்றபயன்        கூறிடுவாய் !

 

தொட்டனைத்து  ஊறிடுமே         

.....மணற்கேணி      மாந்தற்கு

கற்றனைத்து     ஊறிடுமே        

.....காசினியில்       நல்லறிவு !

பட்டனைத்து     ஊறிடுமே         

.....பட்டறிவு !        பேரறிஞர்

பற்றனைத்து     சேர்ந்திடுமே     

.....பெருமையும்     பேர்புகழும் !

 

நவில்தரும்       நூல்நயம்        

.....போலும்          பயில்தரும்

பண்புடை         யாளர்            

.....தொடர்பிந்தப்     பார்மிசையில் !

வெயில்போலக்  காய்ந்துவரின்    

.....வேட்பதற்கு      யார்வருவார் ?

வெண்மதியாய்,  தண்புனலாய்,    

.....விளங்கிடுக !     வாழ்ந்திடுக !

குத்துகின்ற       முள்ளும்         

.....கோதும்           கொடும்பிசினும்

குவிந்துவுள      தோலடுத்துக்     

.....குடியிருக்கும்     நற்சுளையும்

மொத்தவுரு      சேர்ந்து           

.....முயங்குவதே     மூசுபலா !

முற்றிக்           கனிந்துசுவை    

.....முத்துநிறை       தேன்குழலே !

 

சுளையுரியத்     தொல்லைதரும்  

.....தோலுறையாய்   உம்மிடத்து

அளைந்துருகிப்   பழகிடுக !        

.....ஆர்வமுடன்       பணிபுரிக !

அலுவலக        நண்பர்களின்     

.....ஆதரவைப்        பெற்றிடுக !

 

செல்லுகின்ற     தடம்மீது          

.....சிலந்திவலை,    புதருண்டு !

சீராய்நீர்          சென்றிடுக !       

.....சிந்தித்துச்        செயல்படுக !

கொல்லுகின்ற   வெம்புலிதன்     

.....குடற்பசியும்       தீர்ந்துவிட்டால்

கொலைவெறி    யும் வாராது !    

.....கொடுமதியில்    உழலாது !

 

குள்ளநரிக்        குறுமனமோ      

.....குவலயத்தில்     எப்பொழுதும்

குமைந்திருக்கும் !வஞ்சகத்தின்     

.....குடியிருப்பு !       இருளடவி !

கள்ளமதில்       கருஞ்சிலந்தி !    

.....கருத்துதடு         மாறிடுவோர்

குருதியினைக்    குடித்துவிடும்     

.....குடலுருவிச்       சாய்த்துவிடும் !

 

வேங்கையைத்   துணைகொண்டு  

.....வெளியூர்நாம்    சென்றிடலாம் !

விரும்பினால்    பால்கறந்துத்    

.....தாகவிடாய்       தீர்த்திடலாம் !

தீங்கினையே     மனதெண்ணித்   

.....திரிந்துவரும்     தெருநரிகள்

தயைநாடிச்       சென்றுவிடின்     

.....தாரணியில்      வாழ்க்கையிலை !

 

நீரென்றால்        நீரும்             

.....நன்னீராய்         மாறிடுக !

நெருப்பாயின்     நீரும்             

.....நெருப்பாக         மாறிடுக !

நீரூற்றி            நெருப்பை        

.....நீக்கிடலாம்       நீறாயின்

நீள்கொழுந்துச்   சுடர்நீக்க          

.....நினைப்பதுவும்   பேதைமையே !

 

------------------------------------------------------------------------------------

 

கோடுறு        கிளையிற்      காகம்

…..கூடுவைத்      தனேக          காலம்,

பேடொடு       கூடி            வாழும்

…..பெருமரப்       பொந்தில்      வந்தே,

ஆடிய          நாகம்          ஒன்று

…..அதுபெறும்     முட்டை        எல்லாம்,

நாடியே        குடித்துப்       போக

…..நலிந்துளம்     மெலிந்து        வாடி,

துயருற்ற       கதையைப்     போலத்         

…..தோன்றிடும்    சிலநா         கங்கள் !

அயர்வுற்ற      நேரம்          தன்னில்

…..அருகினில்     மெதுவாய்      ஊரும் !

பற்களைப்      பதித்து         நஞ்சைப்

…..பாய்ச்சிடும் ;    பதுங்கி        ஓடும் !

புற்களில்       புகுந்து         கொள்ளும் !

…..புற்றினில்       பொதிந்து       வாழும் !

அடைக்கலம்   அளித்தற்       கென்றே

…..அமைந்தமண்    புற்றழியோ      மேல்

படைக்கலம்     பயந்தர        வாரா !

…..பணிமனை       விதியிது       தானே !

இளையவர்    முதியோர்      என்று

…..ஏதமே         சிலர்தாம்       கொள்வர் ;

களைந்திட     வேண்டும்      என்று

…..காழ்ப்பினில்    துணியச்       செய்வர் !

அய்யகோ !    இவனுக்        கிந்தப்

…..பதவிதான்      சரியா ?        முறையா ?

பையவே       பறித்தா         லன்றிப்

…..பயன்பெற      வியலா        தென்று

எண்ணாத      எண்ணம்     எல்லாம்

…..எண்ணியே    ஏக்கம்          கொள்வர் !

ஒண்ணாத     செயல்கள்      செய்வர்,

…..உயர்பணி      யாளர்          தம்மைக்

காக்கையும்    பிடிப்பர்         கடைக்கண்

…..கட்டளைச்      சிரமேற்        கொள்வர் !

யாக்கையும்    உயிரும்        தங்கள்

…..யாசகம்        அன்றோ        என்பர்

மனக்குறை    எடுத்துச்        சொல்வர் !

…..ஏனிதை        உரைப்பே       னென்றால்

இயற்கையின்   படைப்பின்     மேலாம்

…..மானிடன்      உருவைப்      பெற்றும்

மனதினால்      நரியாய்        வாழும்

…..வஞ்சகர்       கூட்டம்         அங்கும்

வம்புகள்       செய்தற்         கூடும் !

…..கொஞ்சிடும்    மொழிகள்      கூறிக்

கோறலைச்     செய்யக்       கூடும் !

 

ஊரெதில்       உறைந்தாலும்  நீர்

…..ஊறினை       எண்ணல்      வேண்டா !

கூறிடல்        வேண்டும்      வாய்மை

…..கொள்கையும்   வேண்டும்     வாழ்வில்

பொங்கிடும்    ஆவின்         பாலாய்ப்

…..புதுப்புனல்      அருவியின்      நீராய்,

தங்கமாய்      விளங்கி        வாழ்க்கைத்

…..தடந்தனில்    உயர்ந்து       செல்க ! 

 

அஞ்சுகம்       அன்னைச்      செல்வம்

…..ஆரூர்தம்       கருணை       நிதிபோல்

பைந்தமிழ்ச்    செல்லப்        பிள்ளை

…..பாவேந்தர்      நாவலர்        மதிபோல்

காஞ்சியின்    நிழலில்        தோன்றிக்

…..காசினி         வியக்க         வாழ்ந்து

பூந்தமிழ்ப்      பயிரைக்       காக்கும்

…..புரவலர்        அண்ணா       போல

சந்தமாய்       மணந்து        வாழ்வில்

…..சீருடன்         வாழ்க !        வாழ்க !

திங்களைப்     புரைய          காய்ந்து

…..தேந்தமிழ்      நிகர்ப்ப         வாழ்க !

அன்னத்தின்      தூவி         போல ,

…..அனிச்சப்பூ     இதழைப்       போல ,

வண்ணங்கள்    காட்டும்        நீல

…..வான்பனி      நீரைப்          போல ,

நெருஞ்சியின்    மலரைப்      போல ,

…..நீள்கடல்       நுரையைப்     போல ,

அருந்தமிழ்     நெஞ்சம்        கொண்ட

…..அன்பர்காள் !     நன்றி !      வணக்கம் !

 

-----------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 26]

{09-05-2022}

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக