----------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டையிலிருந்து இடமாற்றலான
நண்பர்கள் லூக்காசு -
உளுந்தூர்ப்பேட்டை,
ஜோசப்ராஜ் - கிண்டி,
ஹெர்பட்சன்
- மதுரை ஆகியோருக்கு அளிக்கப்பட்ட
தேனீர் விருந்தின் போது நான் ஆற்றிய உரை.
(ஆண்டு 1969)
-----------------------------------------------------------------------------------------
அன்புடன் அருள்தவழும்
……….அவைத்தலைவர் அவர்கட்கும் !
அமைதியுடன் எனதுரையைச்
……….செவிமடுக்கும் நண்பர்க்கும் !
இன்றுடன் இம்மனையைத்
……….துறந்துசெலும் தோழர்க்கும் !
இனிமையுடன் சுவையுண்டி
……….ஈங்குதந்த பேரவைக்கும் !
தலைவணங்கிக் கரம்குவித்துத்
……….தருகின்றேன் வணக்கம் !
தகைமையுடன் ஏற்றிடுக !
……….தமிழ்த்தாயே வாழ்த்து !
------------------------------------------------------------------------------------------
நாற்பத்து நான்குஇதழ் நாற்புறமும் சூழ்ந்தமரை !
நடுவினில் நித்திலமாய் எழிலூட்டும் மணிமேடை !
சேற்றினில் காலூன்றி
மலரேந்தும் சிறுதண்டு !
செம்பரிதிச் சுடர்காண செம்மாந்து நிற்கையிலே !
இயக்குநரின் ஆணையெனும்
இரைகாற்று தன்கரத்தால்,
இந்நிலையப்
பொய்கைதனில் இளநிலவாய்ப் பூத்திருந்த,
மயக்கழகு மாமரையில் மூவிதழைச் சாய்த்துவிட,
மற்றஇதழ் தடுமாறி மனங்கலங்கி வாடுதுகாண் !
ஒடிந்து விழுந்தஇதழ் ஒவ்வொன்றும்
ஓடைதனில்,
ஊர்ந்துசெலும் படகாகி
உறைவிடமாம் துறைவிலகி,
கடிவிரைவில் வெவ்வேறு உளம்நோக்கிச் சென்றுவிட,
கண்கலங்கித் தாய்மலரும் கவலையுடன்
வாடுதுகாண் !
உளுந்தூர்ப் பேட்டையெனும் ஒளிவிளக்கை
நாடுதொன்று!
உவர்க்கடலின் ஓரமுள
கிண்டிதனைத் தேடுதொன்று !
வளைநரல்
மணிமாடம் வானுயர்ந்த மாமதுரை !
வளம்காண
வேட்கையுடன் விரைந்திடுது பிறிதொன்று !
வெள்ளி நிலவுருக்கி வெண்கரும்புச் சாறூற்றி,
வார்த்து எடுத்தமுது வழங்குபெயர் லூக்காசு !
தெள்ளு தமிழறிவு ;
தேன்கவிதை தூங்குமுளம் ,
துள்ளித் துடிப்படையும் தூயமொழிப்
பற்றுணர்வு ,
அன்னையாம்
தமிழ்மீது அளப்பரிய அருங்காதல் !
அயலூர்தாம் சென்றிடினும் அழியாது
அவர்நினைவு !
புன்னையிளம் பூவெடுத்துப் பொறுமையாம்
நூலிழையில்,
பிணித்தமண
மலராரம் பெற்றபெயர்
ஜோசப்பு !
கண்ணிற்
கருமணியாய், கற்பகமாய், பொற்கிழியாய் ,
காத்து
வளர்த்தமொழி ! காசினியில்
மூத்தமொழி !
விண்ணில்
விளையாடும் வெண்ணிலவுக் கன்னிமொழி !
விழிமலரில்
இமையாக, வேட்பதுடன் காப்பதலால் ;
அன்னைத்
தமிழ்மகவு அவட்காற்றும் நற்பணியென் ?
அவளன்றித் தமிழகத்தில் அறிவொளியும் சுடர்விடுமா ?
என்னும் மெய்ப்பொருளை இலட்சியமாய்
ஏந்தியவர் !
எவ்வூரில் வாழ்ந்திடினும் இனிதூறும் அவர்நினைவு !
ஆழிவிளைப் பவழத்தில் அடக்கமாம் மெருகேற்றி
,
அமைதியெனும் பொன்னிழையில்
ஆக்கியதோர் மணிமாலை !
தோழமையின்
பேருருவம் ; துவளாத
அன்புமுகம் !
துணைவராம் ஹெர்பட்சன் தூயநினை வழியாது !
ஆண்டுகள் பலவாக அருமையுடன் பணியாற்றி ,
அன்பினால் எம்முடைய
அகமலரில் குளிரூட்டி ,
பண்பிற்கோர் காட்டாகப் பாங்குடனே செயலாற்றி ,
பாசமெனும் கதிர்கொய்துப் பறந்துசெலும் பைங்கிளியீர் !
கத்தும் கடலனையக் கண்காணா
தொலையூரில்
கடமைதனை
ஆற்றிடவே கடிதுசெலும் கண்மணிகாள்!
குத்து விளக்கெரியும் கோலமிகுத் தீச்சுடரின்
கொழுந்தில் திரியேற்றிக் கொண்டுடனே செல்கின்றீர் !
மெத்தவும் உயர்ந்தகலைக் கோபுரங்கள், ஆலயங்கள் ,
மேவும் இருள்நீக்கி மேதினியில் வாழ்ந்திடுக !
இத்தரணி போற்றிடவே ஏற்றமுடன் நீர்வாழ்க !
இன்பத் தமிழ்காத்து இன்னிசையாய் வாழ்ந்திடுக !
அறிவுக் களஞ்சியமாம் அண்ணாபோல் நீர்வாழ்க !
அகத்தியன் அருட்செல்வி அருந்தமிழாய் வாழியநீர் !
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக