என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 25 ஜூலை, 2022

பாடல் (58) (2017) அவைத்தலைமை (இராமலிங்கம் பணி ஓய்வு)

----------------------------------------------------------------
திருத்துறைப்பூண்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
(சத்திரம் நடு நிலைப் பள்ளி) 18-04-2017 அன்று நடைபெற்ற
பணிநிறைவுப் பாராட்டு விழாவின்போழ்து
நிறை பணித் தலைமை ஆசிரியர்
.இராமலிங்கம் B.Sc.,M.Ed அவர்கள் ஆற்றிய 
நன்றியுரை
கவிதை ஆக்கம் வை.வேதரெத்தினம் ]
-------------------------------------------------------------------------


அவைத்தலைமைப்    பொறுப்பேற்று    
.....அணிசெய்யும்       பெருந்தகையே !
..........அருந்தமிழில்         உரையாற்றி       
...............அமர்ந்திருக்கும்     புரவலர்காள் !

நவையிருளில்         வழிகாட்டும்       
.....நன்மதியீர்   !         இளந்தலையோர் !
..........நற்கல்வி               அமுதுபெற        
...............நாள்தோறும்         உழைப்பவர்காள் !
               
குவைபொலியும்      பொற்காசாய்க்    
.....குழுமியுள            நண்பர்களே !
..........கோதையரே !          ஆடவரே !         
...............கூர்மதியீர் !          அரங்கத்தீர் !
               
சுவைமிகுந்த          சொல்மாலை !    
.....சூட்டுதற்கு            யான்வந்தேன் !
..........சோதனையாய்க்       கருதாமல்         
...............சுவைத்திடுக !       வணங்குகிறேன் !
               
மதுமலர்கள்           வளம்பெருகும்          
.....மயல்மதுக்கூர்      ஒன்றியத்தில்
..........மனங்கவரும்      சிற்றூராம்               
...............மதுரபா               ஷானிபுரம்  !
               
விதுப்புடனே           ஈங்குவந்தேன் !         
.....வேலருளால்        பணிஏற்றேன் !   
..........வேலைதனில்        சேர்ந்ததுநான்         
...............எண்பத்து          எட்டலவோ !     
               
குதுகுதுப்பாய்ப்        பணியாற்றிக்    
.....கொற்றவரின்      உதவியினால்
..........கோரினேன்;       இடம்பெயர்ந்தேன்     ...............குலவுஆண்டாங்     கரையினிலே !
               
சதுப்புநிலம்            நெல்வயல்கள்          
.....சலசலக்கும்       மடைப்பாய்ச்சல் !
..........சலிப்பின்றி         நித்தநித்தம்             
...............சார்பள்ளிப்      பணிபுரிவேன்  !! 


பயிற்றுவிக்கும்    ஆசிரியர்ப்    
.....பணிநிலையில்    நிறைவின்மை !]
..........பரிந்துபெற்று              தீவாம்பாள்             
...............பள்ளிநாடிப்          பறந்தனனே !      

துயில்பொழுதும்     ஆழ்மனதில்        
.....துல்லியமாய்க்      கனவுபல !
..........தூயகல்விப்       பயிர்வளர்க்க   
...............தூவும்மழை          தேடினனே  !

வாயிலிலே           வாய்ப்புஒன்று      
.....வந்துநின்று         அழைத்தது காண் !
..........வாஞ்சையுடன்    ஈங்குவந்தேன்     
...............வளர்பயிர்க்கு        நீர்தரவே  !

கோயிலினுள்         புகுந்ததுபோல்      
.....குளிர்ச்சியுற்றது     எனதுஉள்ளம் !
..........கூடும்கல்விச்     சாலையெல்லாம்    
...............கோயில்தானே     உண்மையுண்மை!

               @@@@@@@@@@@@@

இடைநிலையில்     ஆசிரியர்ப்            
.....பணியிடத்தில்    அமர்வுபெற்று,
..........எழிலார்ந்த           மதுக்கூரின்          
...............மதுரபா            ஷானிபுரம்,

குடைதொடங்கி      ஆண்டாங்            
.....கரையடுத்து,      தீவாம்பாள்
..........குறிஞ்சிமுதல்       இப்பள்ளி             
...............ஈறாகப்            பலநிலையில்

அடைந்தபணிப்      பட்டறிவால்          
.....அரசினரின்        தண்ணளியால்
..........அறிவியல்            பட்டதாரி              
...............ஆசிரியர்          பணியிடத்தில்

மிடைப்புற்றேன்     தொண்ணூற்று     
.....ஒன்பதிலே        உயர்வுற்றேன் !
..........மென்மேலும்         ஊக்கமுடன்          
...............செயலாற்றும்     உரம்பெற்றேன் !

ஆறாண்டு,            பட்டதாரி             
.....ஆசிரியர்          பணிக்காலம்,
..........அதன்பின்பு           எழிலூரில்           
...............நடுநிலைப்        பள்ளிதனில்       

ஈராண்டு              தலைமைநிலை      
.....ஆசிரியர்ப்         பணியேற்பு !
..........இரண்டாயிரத்        தேழுமுதல்          
...............இவண்தலைமை       ஆசிரியர்,

நூற்றிருபான்        திங்கட்கும்           
.....மேலதிக          மாதங்கள்
..........நுதற்கண்ணன்       ஆசியுடன்            
...............நுழைபுலமும்           துணைசெய்ய

போற்றரிய           ஆசிரியப்             
.....பெருமக்கள்       ஒத்துழைப்பால்
..........புரிதலுடன்           பணியாற்றி          
...............பணிநிறைவும்          எய்திவிட்டேன் !

                  @@@@@@@@@@@@@
           
இனிமைகள்       நிறைந்தவை       இவ்வுலகம்    -  அவை
ல்லைகள்         கடந்தவை           நாமறிவோம் !
கனிகளைத்        தேடுதல்             நம்மியல்பு !   - வெறும்
காய்களை             நாடுதல்             பிழையலவோ !
பனிமலர்           போன்றவை         பிள்ளைமனம்  - அதைப்
                                பக்குவப்                படுத்துதல்           நம்கடமை !
நுனிக்கழிக்         கன்னல்              இனித்திடுமோ !  - நம்
   நுகர்ச்சியில்             தவறுக்கு             இடமில்லை !

                      @@@@@@@@@@@


குருத்தோலை போன்றவர்கள் மாணாக்கர்கள் ! - 

.....அவரைக்கோபுரமாய் உயர்த்துதலில் நமக்கும்இன்பம் !

விருப்புடனே கற்கையிலே விடலைக்கின்பம் ! - பிள்ளை

.....வெற்றிபல குவிக்கையிலே தந்தைக்கின்பம் !

முருக்கிதழின் சொற்பொழிவால் அன்னைக்கின்பம் ! – ஊர்

.....முரசொலித்துப் போற்றுகையில் உறவுக்கின்பம் !

அருந்திறலால் சாதனையால் நாட்டிற்கின்பம் ! - உலகு

.....அவர்புகழைப் பாடுகையில் பள்ளிக்கின்பம் !


                             
                     @@@@@@@@@@@@@


ஆசிரியப்         பணிஎனக்கு       பெருமை    தந்தது !   -   பல
......ஆண்டுகளாய்    எனதுழைப்பு    நிறைவைத்   தந்தது !    
மாசிலாத         வீணைபலவும்    தேடித்          தந்தது ! - கல்வி
......மாண்புதனை       உலகுணர்த்த      வாய்ப்புத்       தந்தது !
வீசுகின்ற         தென்றலாக       உணர்வைத்    தந்தது !  ஒளி
......விளக்குகளை        ஏற்றிவைக்கும்     உரிமை         தந்தது !
தேசுமிக்க       அறிஞர்களைத்   தேடித்           தந்தது !  இனிய
......தேன்றமிழில்        ஆர்வம்தந்து         முழுமை           தந்தது !    

                        @@@@@@@@@@@@

வரையோடு உறவாடி வானின்று தரைவீழும்
..........வாரியைக் காண்பதினிது !
கரையோடு விளையாடி நுரையோடு எழில்சிந்தும்
..........கடல்நீரைக் காண்பதினிது !
மரையோடு உறவாடி மணமோடு இசைபாடும்
..........மலரூதி காண்பதினிது !
நரையோடு திரைசூழ்ந்த நல்லோர்தம் உளமார்ந்த
..........நல்லாசி காண்பதினிது !

                                                                 

புதுப்புனல் காண்பதினிது ! - மலரும்
..........பூவிதழைக் காண்பதினிது !
பொன்னிலவைக் காண்பதினிது ! - மழலைப்
..........புன்னகையக் காண்பதினிது !


மதுக்குயில் காண்பதினிது ! – ஓடும்
..........மான்மறியைக் காண்பதினிது !
மாந்தளிரைக் காண்பதினிது ! – தோகை
..........மயிலினம் காண்பதினிது !


செம்பரிதி காண்பதினிது ! – துள்ளும்
..........செம்மீன்கள் காண்பதினிது !
செழிமுகில் காண்பதினிது ! – வானில்
..........செவ்வில்லைக் காண்பதினிது !


அம்புயத்தைக் காண்பதினிது ! – வீழும்
..........ஐந்தருவி காண்பதினிது !
ஆலயத்தை காண்பதினிது ! – மாணவர்கள்
..........அலர்முகம் காண்பதினிது !


              @@@@@@@@@@@@

சுவையோங்கு      வாழ்வுக்கு       
.....வித்திட்ட     முன்னோர்க்குச்      
..........சொல்லுவேன்
நன்றியுரையை !    கல்வி


அவையத்தில்      எனையேற்றி     
.....ஒளிவீசச்   செய்தோர்க்கு      
..........அணிவிப்பேன்
நன்றிமலரை !

                   @@@@@@@@@@@
                                                                           
அறிவுக்   கண்களைத்   திறந்து   வைத்தஎன்  
......அரசே   குருவே   மிகநன்றி ! – நீவிர்
..........அளித்த   கல்வியால்   விளைந்த  பயிரிது  
அய்யா   குருவே   மிகநன்றி !
               
செறிந்த   கல்வியை   அறிந்து   சொரிந்தனை   
......அருட்திரு அரசே  மிகநன்றி ! – நீவிர்
..........செதுக்கிய  சிலையிது  கல்விக்  கோயிலில்  சீர்பெற  
வைத்தனை  மிகநன்றி !

பறித்த   மலர்களை   உரித்த  சுளைகளை  
......அளித்து  மகிழ்ந்த  என்  குருகுலமே ! –நிவிர்
..........பற்றிய  கரமிது   முற்றிய  கனியிது  அத்துணை  
பெருமையும்  உமதருளே !
               
குறித்த   இலக்கினை   மறித்த  தடைகளை  
......உடைத்து  எறிந்திட உரம் தந்தோய் ! –நீவிர்
..........கொடுத்த  அறிவொளி  விலக்கும்  இருளினை  
துடைத்து  எறிகுவன்  மிகநன்றி !
                        
                                @@@@@@@@@@@@
              
பாராட்டிச்   சீராட்டிப்   பாலூட்டி   விழிகளில் 
      பாசத்தைப்  பொழிந்  தூற்றித்  தந்தவர் – என்
              பார்வைக்கு  ஒளிதந்து  நேசித்து  அளிதந்து 
 பரிவோடு  அமுதூட்டி   வந்தவர் !


ஆராரோ      இசைபாடி  விழிமூடித்  துயில்சூழ   
       ஆட்கொண்   என்காவல்  தெய்வதம் ! - என்                                                                             அகத்தோடு உறவாடி நிலைபெற்ற எனதன்னை
                   அறச்செல்வி ! வணக்கமம்மா !

                                                                           
                                   @@@@@@@@@@@             
              
எளிய   குடும்பம் !  உயர்ந்த  பார்வை !
       இன்சொல் !   வலிமை !    ஏர்மதிமை !
               எங்கள்  குலத்தின்  கலங்கரை விளக்கு !
எனதுதந்தை  என் ஒளிவிளக்கு 


குளிர்மதி நிலவின் அழகிய ஒளியே ! 

        குழகன் எனதிரு விழிகளின் மணியே !

                குருவே ! மறைந்தஎன் தந்தாய் ! வணக்கம் !

                       குழவியென் வாழ்வுநின் அருளே ! வணக்கம் !
   
                 @@@@@@@@@@

அன்னைக்கும்  தந்தைக்கும்  
         நன்றி சொல்லல் முறையில்லை !
 அவர்களது     அன்புக்கு      
         இணையெதுவும்    ஈங்கில்லை !
என்றைக்கும்  என்வாழ்வில் 
          ஒளிவிளக்காய்த்  திகழ்பவர்கள் !
இருவரையும்   வணங்கியெந்தன்
           நன்றியுரை  தொடர்கின்றேன் !
                             
                                      @@@@@@@@@@

எங்களது   இல்லத்தின்  இயக்குவிசை பொதிசுமந்து
எந்நாளும்  எமைக்காக்கும்  சுமைதாங்கி ! கற்பலகை !
தங்கமென  யாம்மதிக்கும்  தாம்பூலம் ! எனது அத்தை
தங்களுக்கு என்நன்றி ! வணங்குகிறேன் வாழ்த்திடுக !

                                       @@@@@@@@@@

திக்கெதுவும்   தெரியாமல்  திகைத்திருந்த போழ்தினிலே !
தெய்வம்போல்   வந்துநின்று   திசையறிந்து   வழிகாட்டி
வக்கணையாய்   ஆசிரியப்   பயிற்சிபெற   செய்தவர் நான்
வணங்கிடும் என்   மாமனார்   வாலறிவ !    மிகநன்றி !

                                        @@@@@@@@@@

வாழ்க்கைத்    துணைஎனக்கு     வரமாக     அமைந்ததனால்
வாழ்வாங்கு  வாழுகின்ற   வாய்ப்பெனக்கு   வந்ததுகாண் !
காழ்மரமாய்   நின்றெனக்குக்   கைகொடுத்த   திலகவதி
காரிகையாள்   என்துணைக்குக்  கழறுகிறேன்  நனிநன்றி !

                                       @@@@@@@@@@

உற்றார்க்கும்,     உறவினர்க்கும்,    
..........ஊரார்க்கும்,   உளம்நிறைந்த   
உவகையுடன்    நலன்செய்த    
..........நண்பர்கட்கும்,    உடன்வதியும்
வெற்பனைய    ஆசிரியப்         
..........பெருமக்கள்    அலுவலர்கள்,
வீரியத்தை      வித்தாக்கி      
..........விளைவிக்கும்     மாணவர்கள்,
அற்புதமாய்     ஆசிரியப்         
..........பணிப்படகில்      பயணிக்க
ஆதரவாய்    நின்றவர்கள்,     
..........அனைவர்க்கும்    ஈசனுக்கும்,
நெற்றுதமிழ்ச்  சொல்லெடுத்து    
..........நேயமுடன்        நானுரைப்பேன் !
நெஞ்சார்ந்த    நன்றிஅய்யா !    
..........நன்றிநன்றி !!     மிகு நன்றி !!!
                                                                        
                            வணக்கம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
                     

                       
                            -: அருஞ்சொற்பொருள்:-

நவையிருள்      கடுமையான இருள்     இளந்தலையோர்   =                    மாணவர்கள்
குவை            கிண்ணம்:                      விதுப்பு            ஆசை
குதுகுதுப்பு        ஆவல் :                       கொற்றவரின்      அரசினரின்
குலவு             கொண்டாட்டம்               சதுப்பு நிலம்       சேற்று நிலம்
குடை தொடங்கி  ஆட்சி எல்லை தொடங்கி       குறிஞ்சி          சிற்றூர்
தண்ணளி        கருணை                       மிடைப்பு         பணியேற்பு
இவண்           இங்கு                         நூற்றிருபான்     நூற்று இருபது
நுதற்கண்ணன்    சிவன்                         நுழைபுலம்       நுண்ணறிவு
கன்னல்          கரும்பு                        நுகர்ச்சி         அனுபவம்
விடலை         பள்ளிப் பிள்ளைகள்            முருக்கிதழ்      சிவந்த உதடுகள்
வீணை பல      நல்ல மாணவர்கள் பலர்        தேசுமிக்க        புகழ் மிக்க
வரை            மலை                         வாரி            மழை
மரை            தாமரை                       மலரூதி         வண்டு
புதுப்புனல்        புதிய வெள்ளம்               மதுக்குயில்      இனிய குயில்
மான்மறி         மான்குட்டி                    செழிமுகில்       மழைமேகம்
சேய்வில்         சிவந்த வானவில்            அம்புயம்         தாமரை
வக்கணை        ஒழுங்குசாதுரியம்;        காழ்மரம்  வைரம் பாய்ந்த மரம்
வெற்பு           மலை                        வீரியம்          தைரியம்வீரம்
ஈசன்             இறைவன்                   நெற்று           முற்றிய கனி                

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக