என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 17 மே, 2023

பாடல் (68) தமிழன் என்பது நம் முகவரி !

 

 

தமிழன்     என்பது     உரிமையின்   முகவரி !

.........தமிழைத்     துறந்தால்    நமக்கிலை    பிறவழி !

அமுதத்    தமிழ்மொழி   அருகில்   இருக்கையில்,

………ஆங்கில      உவர்நீர்   அருந்திட   லாமா ?

உமியைத்    தின்னும்    விலங்குகள் போலே

……….உள்ளுறை     அறிவை    இழந்திடலாமா ?

தமியன்     அலவே ?    தமிழா !    தமிழா !

……….தமிழ்மீ     துனக்குப்      பற்றென்ப     திலையா ?

 

வைகறைத்    துயிலெழும்     வேளையில்      நாவில்

……….வரும்குட்     மாணிங்       வண்டமிழ்     அலவே !   

பைந்தொடி    மனைவியைப்    பார்த்துக்        கூவும் 

………..”பாவை !”.      காப்பி !”      இஃதென்ன     தமிழா ? 

கைகளில்     பேஸ்டும்       பிரஷும்       ஏந்தி      

…………கருக்கலில்    குளியறை      நுழையும்      தமிழா !    

மைந்துணர்    வோடு     பற்பசை        தூரிகை

…………மணித்தமிழ்      உரைத்திட    மனமுனக்   கிலையா ?

 

பேண்டும்    ஷர்ட்டும்     ஆங்கிலம்     அலவோ,

……….பீடுடை         கலிங்கம்      மேற்படம்    என்பாய் !

பூண்டிடும்    அரணம்      காலணி    மறந்தாய் !

……….புகுத்தும்    கால்களை    ஷூவினில்  ஈந்தாய் ?

மீண்டும்    மீண்டும்    டிபன்என      லாமோ ?

……….மின்மினி    மனிதா     சிற்றுணி       இலையா ?

ஆண்டும்    ஈண்டும்     ஆங்கிலம்      தானா ?

………அன்னைத்    தமிழைக்    கைவிடல்    முறையா ?


காலையில்     தொடங்கி     இரவின்   மடியில்

…………கண்துயில்     வேளை       ஈறாய்த்     தமிழன் !

சாலையில்     ஆலையில்    அலுவல்    மனையில்

…………சந்தையில்     மந்தையில்    ஊருணிக்   கரையில்

சோலையில்    எங்கும்       ஆங்கிலச்     சொற்கள்

…………சுழலுது        நாவில்      ஈதென        ஞாயம் ?

தோலில்     சுரணையை      இழந்துவிட்    டனையோ ?

………..துப்புர       வாய்த்தமிழ்     துவளுது      சோர்ந்து !

 

பெற்றவள்      நிகராம்       நந்தமிழ்     நீக்கிப்

………….பிறனில்       வாழும்     ஆங்கில      மொழியை

கொற்றவி    யாகக்    கொணர்ந்துன்      வீட்டில்   

……………குடிவைத்      தனையே     ஈதென        நீதி?

நற்றவத்        தமிழைப்     போற்றிட     மறந்தாய் !

…………..நன்றோ       ஆங்கிலம்     கலந்துரை     யாடல் ?

அற்றம்         விளைக்கும்      ஆங்கிலம்     தழுவல்

………….அறமா ?     தகுமா ?      சொல்லுக       தமிழா ?

    

தாய்வழி      வந்தவுன்      தமிழைப்      போற்று !

…………தாழ்வடம்      போன்றநின்    தமிழைப்   போற்று !

காய்மதி      ஒளிநின்        கனித்தமிழ்    போற்று !

………….கன்னற்       கரும்பாம்    தூய்தமிழ்       போற்று !

நோய்மொழி   ஆங்கிலம்      நொதுநிலை     அடைக !

………..நூர்த்திடு      பிறமொழிச்   சொல்லினி    வேண்டாம் !

வாய்மொழி     விரல்மொழி    வண்டமிழ்      வளர்க  !

………….வாழ்வில்    நாமினித்       தமிழினை   மறவோம் !!


-------------------------------------------------------------------------------------

                                     ஆக்கம் + இடுகை:
               

                                   வை.வேதரெத்தினம்,

                            (vedarethinam70@gmail.com)

                                              ஆட்சியர்,
                   
                            "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

      [திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]

                                             {27-07-2022}

------------------------------------------------------------------------------------  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக