தமிழ் தமிழ் என்று தலைப்பாடாய்ப் பேசுகின்றோம் !
தமிழ் மொழியைக் காப்பதற்கு எவ்வழி நாம் முயல்கின்றோம் !
அமிழ்தமொழி தமிழென்று அரங்குகளில் பேசுகிறோம்!
ஆங்கிலம் கலவாமல் பேசுதற்கு அஞ்சுகிறோம் !
அய்யா என்று அழைக்கும் சொல் அடிக்கரும்பாய் இனிக்காதோ ?
ஆங்கிலத்தில் “சார்” என்று அழைப்பது தான் மாண்பாமோ ?
துய்யதமிழ் மொழி துறந்து “குட்மாணிங்” நமக்கெதற்கு ?
துடிக்கிறது நெஞ்சமெலாம் ”மம்மி” எனும் விளி கேட்டு !
அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்க வேண்டிய நாம்
ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புகிறோம் குழந்தைகளை !
என்னை ? இஃதென்ன இழிய நிலை ! தமிழர்களே !
இரந்து வாழ்வதினும் இறந்துவிடல் மேலன்றோ ?
வடமொழியை வருவித்துத் தமிழ்க் குடிலில் இடம்தந்தோம் !
வந்தமொழி நம்மொழியை வாட்டும்நிலை காணீரோ ?
அடடா ! ஓ ! தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு
அறியாமல் நாம் புழங்கும் சொற்களுக்கும் அளவேது ?
சோறு என்று சொல்லாமல் “சாதம்” என்போர் ஈங்குண்டு !
“சாதம்” தமிழல்ல என்பதை நாம் என்றுணர்வோம் ?
“ஆறு” என்று சொல்லாமல் “நதி” என்று அழைப்பவர்கள்,
அறிவாரா ”நதி” எனும்சொல் அழகுதமிழ் இலையென்று !
வடமொழியை விலக்காமல் வளம் குறையும் தமிழுக்கு
வலிமையா சேர்க்கிறது வக்கணையாய் ஆங்கிலம்தான் ?
அறியாமை விலக்கிடுவோம் ! அன்னைமொழி காத்திடுவோம் !
ஆங்கிலத்தில் பேசுவதை அறவே நாம் துறந்திடுவோம் !
தலைநிமிர்ந்து வாழ்வதற்கு “தமிழன்” என்னும் உணர்வு தேவை !
“தமிழ்”மொழி நம் விழியலவோ ? விழிப்படைக ! தமிழினமே !
உறங்கியது போதுமடா ! செந்தமிழா ! சீறியெழு !
உன்மொழிக்கு அணிசெய்ய உளம் துணிக ! அணிதிரள்க !
மறத்தமிழா ! உன்நாவில் மணித்தமிழே தவழட்டும் !
மாறின்றி ஆங்கிலத்தை மறந்துவிடு ! தமிழ் வாழ்க !
------------------------------------------------------------------
சொற்பொருள்:
தலைப்பாடு = பொறுப்பு
மாண்பாமோ = பெருமையோ ?
துய்ய தமிழ் = தூய தமிழ்
என்னை = என்ன ?
இரந்து = பிச்சை எடுத்து
ஈங்குண்டு = இங்கு உண்டு (இவ்வுலகில் உண்டு)
இலையென்று = இல்லை என்று
வக்கணையாய் = ஒழுங்காய், புத்திசாலித்தனமாய்.
மாறின்றி = மாற்றுக்கருத்தின்றி
-------------------------------------------------------------------------------------
------------------------------- -----------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக