என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 12 ஜூன், 2022

பாடல் (47) (1974) இப்படித்தான் வாழ்வேண்டும் (நெட்டெழுத்து ஏட்டுப் பதிவு) !

---------------------------------------------------------------------------------------

நினைவிற்கு உளம் கேட்டார் ! மணம்

மிக்க மலர் தந்தேன் !

[மாணவர்களின் நெட்டெழுத்து ஏட்டில் எனது

சொல்லோவியம்]

(ஆண்டு 1974)-

---------------------------------------------------------------------------------------

                                                     (ஒன்று)

இப்படித்தான்    வாழவேண்டும்    என்றநல்லோர்

......இயல்பான    வரையறைக்குக்     கட்டுப்பட்டுச்

செப்பனிட்ட    பாதையிலே    தடம்மாறாமல்

......சீராகச்     செலுத்திடுக     வாழ்க்கைத்தேரை !

ஒப்பரிய     நற்றவனாம்    அண்ணாபோல

.....ஒளிவிளக்காய்   வாழ்ந்திடுக !  உலகம்போற்றும்

செப்புகலை    யாவையும்நின்   சிந்தைகொண்டு

......செந்தமிழாம்   உயிர்போற்றி   நிலவாய்வாழ்க !

---------------------------------------------------------------------------------------

                                                        (இரண்டு)

வெள்ளைச்   சிறகடித்து  விண்ணுயர   வட்டமிடும் ,

......வீட்டுப்  புறாவொன்று  விதிபிறழ்ந்து  காக்கையுடன் ,

உள்ளத்து  மயல்கொண்டு  உறவாடப்  புகுந்தக்கால் ,

......ஒண்சிறகு  நிறம்மாறா !  உள்ளந்தான்  மாறிவிடும் !

---------------------------------------------------------------------------------------

                                                           (மூன்று)

உலகத்து    மாந்தரெலாம்    உயிர்வாழ,    நடமாட,

......உதவுங்கால்   தடுமாறின்   ஒருநொடியே   இடராகும் !

அலகொத்த  வெண்பற்கள்  அரண்மிகுந்த  ஆழிதனில்,

.....அளைந்தாடும்  நாவிடரின்  அந்நொடியே  கூற்றுவரும் !

---------------------------------------------------------------------------------------

                                                             (நான்கு)

வெள்ளிப்  பணம்தனது  விழிதிறந்து  நோக்குங்கால்,

......விசும்பனைய  நீதியெலாம்  வெண்மணலாய்  ஆகிவிடும் !

கள்ளமனம்  உடையோர்பால்  காசுதான்  மந்திரக்கோல் !

......காசினியின்  நியதியிது  !  கருத்துடனே  வாழ்ந்திடுக !

---------------------------------------------------------------------------------------

                                                               (ஐந்து)

நலமுள்ள    வாழ்விற்கு    வித்து !   -   நாட்டில்

......நாலா   யிரமென்று   சொன்னவர்   கூற்று !

பொலமென்று   எண்ணிநாம்   மின்னல்   -  நாடிப்

.....போகின்ற  தடமாகும்  பெறுவதோ  இன்னல்  !

---------------------------------------------------------------------------------------

                                                              (ஆறு)

இல்லைக்கு    இடமில்லா   இல்லம் ! –  என்றும்

......இனிமையும்  செல்வமும்  பொலிவோடு  துள்ளும் !

முல்லைப்பூ   மணமாக      வாழ   -   வாழ்க்கை

......முனியாத  பசியென்ற   உணர்வொன்றே  போதும் !

---------------------------------------------------------------------------------------

                                                               (ஏழு)

பொய்யென்ற    நிலையாமைப்    போது ! -  இந்தப்

......புவிமீது  மலராகும்  ஒருகாலின்  மீது !

மொய்வண்டு     தேனுண்டு     ஓடும் !   உடன்

......முகம்வாட  மலரங்கு  சருகாகி  வாடும் !

மெய்யென்ற    உயர்வான   வித்து  ! -   கனியில்

......மீளாது  துயில்கொள்ளும்  மதிப்புள்ள  சொத்து !

பெய்கின்ற  நீருண்டு  மணலில்  !    இயற்கையின்

......பிள்ளையாய்  உருவாகி   இருகாலில்  வாழும் !

--------------------------------------------------------------------------------------

                                                             (எட்டு)

உழுதுண்டு   வாழாத   வாழ்க்கை ! -  உண்ண

......உப்பில்லா உணவாகும்  உழவர்தம்  வேட்கை !

பழுதென்று   இகழாது   போற்றி !-  பழனம்

......பயில்வோரே  பெறுவார்கள்  பார்மீது  வெற்றி  !

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 29]

 {12-06-2022}

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக